பக்கம்:ஈச்சம்பாய்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஈச்சம்பாய்


ஆகாயத்தையே வெறித்துப் பார்த்த அந்தப் பெண் தன் தலையில் அடித்துக் கொண்டாள். பொங்கிய கண்ணீரை முழங்கைகளில் தேய்த்தாள். பிறகு திடீரென்று எழுந்து ஊரை நோக்கிப் பார்ப்பதும் கீழே அமர்வதுமாக இருந்தாள்.

மஞ்சள் பிரகாசியால் அவளின் சோகத்தைச் கமக்க முடியவில்லை. மெல்லப் பறந்து அவள் காலருகே பறந்து வந்தது. மூக்குத்தி ஜொலிக்கக் காட்சியளித்தவள், இப்போது அந்த மூக்குத்தியையும், வேறு எதையோ ஒன்றையும் பறிகொடுத்த சோகத்தோடு இருப்பதை அந்தத் தூக்கணாங்குருவி புரிந்து கொண்டிருக்கலாம்.

மஞ்சள் பிரகாசி அவள் காலைச் சுற்றியே வலம் வந்தது. ஒப்பாரி வைப்பதுபோல், இறக்கைகளை அடித்துக் கொண்டே அவல ஒலியை எழுப்பியது. பின்னர், இறக்கைகளை அடக்கி, குரலை அமுக்கி அவள் காலைச் சுற்றிச் சுற்றியே வந்தது. ஏதோ சொல்லப் போவதுபோல் அதன் அலகுகள் துடித்தன. ஒருவேளை இப்படிச் சொல்ல முயற்சி செய்திருக்குமோ?

‘ஒங்க இனத்தால் அற்ப இனம்னு ஒதுக்கப்படுகிற எங்க குருவி இனத்துல ஒரு பெண் குருவி, பாதுகாப்புக்காகத் தன்னோட நிஜமான காதலையும் உதறித் தள்ளுது.ஆனால் நீயோ, போலித் தனமான காதலுக்காக ஒன்கிட்ட இருந்த பாதுகாப்பயும் உதறித் தள்ளிட்டியே! ஒனக்காக இப்போ என் இறக்கைகள் படபடக்கே... நாடி நரம்பெல்லாம் துடிக்குதே. ஏன்னு கேக்கறியா...? நான் அற்ப ஜாதி. ஒருவரை அற்பத்தனமாய்ப் பயன்படுத்திக்காத குருவி ஜாதி.’

ஆனந்த விகடன், 1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/28&oldid=1495621" இலிருந்து மீள்விக்கப்பட்டது