பக்கம்:ஈச்சம்பாய்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெரியம்மா மகன்....



அந்தப் பூங்காவில், ஆணும் பெண்ணுமாய் கலந்து நின்ற இளைஞர் கூட்டத்தை 'ஜிப்சி' சிம்பா, கலப்படமாக்க' ஆயத்தமானபோது...

குமுதாவும் இளங்கோவும் இணை சேர்ந்து அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தார்கள். உள்ளடக்கம் எப்படியோ அவர்களின் உருவப் பொருத்தம் பிரமாதம். அவனும் இவளும் ஒரே நிறம். சிவப்புக்கும் கறுப்புக்கும் இடைப்பட்ட மாநிறம். அவனது உருண்டு திரண்ட தேக்குமர உடம்பை உரசியபடியே அவளின் நளினப்பட்ட மேனி வெற்றிலைக் கொடியாய் நெளிந்தது. அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தபடியே, குமுதா இளங்கோவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவன் முன்னால் ஒருச்சாய்த்து நின்று, அவனது நடை வேகத்தை நிறுத்திவிட்டு பதறிப் பதறி, கைகளை உதறி உதறிப் பேசினாள்.

'எனக்கு பயமாய் இருக்குது இளங்கோ ... வேண்டாம். திரும்பிப் போயிடலாம்'.

'இந்தாப் பாரு குமுதா! -- இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பயப்படுறியா? இல்ல நான் உன்ன தப்பா நினைப்பேன்னு தயங்குறியா?'

குமுதா, நீல நிறத் துப்பட்டா துணியின் முனையை கடித்தபடியே மௌனமாக நின்று, தரையை ஒரு பூச்செடியோடு பெருவிரலால் துழாவிய போது, இளங்கோ புரிந்து கொண்டான், ஆனாலும் புரியாதபடியாய்ப் பேசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/29&oldid=1371914" இலிருந்து மீள்விக்கப்பட்டது