பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

147


பொருட்கள் கொங்கு நாட்டு இரும்பு என்றும், இரும்பை உருக்காக மாற்றும் கலையைக் கொங்கு நாட்டவரே தெரிந்திருந்தனர்" என்றும் சர் ஜே.ஜி.வில்கின்சன், ஜே.எம்.ஹீத் முதலிய உலோகவியல் அறிஞர்கள் எழுதியுள்ளனர். அலெக்சாந்தருக்குப் புருஷோத்தமன் (போரஸ்) காணிக்கையாகக் கொடுத்த இரும்பு கொங்கு நாட்டு இரும்பு என்றும் கூறுவர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்படைச் சின்னங்களில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களாகவும் வேட்டைக் கருவிகளாகவும் வேளாண் கருவிகளாகவும் இரும்பினால் செய்யப்பட்ட பல கருவிகள் கிடைத்துள்ளன. 1800ஆம் ஆண்டு சென்னிமலையில் எவ்வாறு இரும்பு காய்ச்சி எடுத்தனர் என்பதை புக்கானன் தம் நூலில் படத்துடன் விளக்கியுள்ளார். இம்மாவட்டச் சந்தைகளில் முன்பு 'இருப்புக்கட்டி' விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதைக் கல்வெட்டுக்கள் மூலம் அறிகின்றோம்.

நொய்யல் கரையில் பல ஊர்களில் இரும்பு காய்ச்சும் போது கசடோடு எடுக்கப்பட்ட துண்டுக்கற்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. கொடுமணல் அகழாய்வில் இரும்பை உருக்காக மாற்றும் கொதிகலனும், ஊதுலைகளும் கிடைத்துள்ளன. சென்னிமலை, கீழ்பவானி, தொப்பம்பாளையம், கரிதொட்டம்பாளையம், தொட்டக்கோம்பை, ஊதியூர், பங்களாப்புதூரின் வடக்கே மலைப்பகுதி ஆகிய இடங்களில் இரும்புத்தாது கிடைக்கிறது.

செம்பு

"சோழன் பூர்வ பட்டயம்' என்ற வரலாற்று நூல் பவானியாற்றங்கரையில் 'செப்புப்படிமங்கள்' செய்யப்பட்ட விதத்தைக் கூறுகிறது. கோயிலில் உள்ளவை 'செப்புப்படிமங்கள்' என்று கூறினாலும் அது கலப்பு உலோகத்தால் (பஞ்சலோகம்) ஆனவை. செம்பினால் செப்பேடுகள் பல உருவாக்கப்பட்டன.

உலோகம் அல்லாதவை
வண்ணக்கற்கள்

கல் மணிகள், பாசிகள் செய்யப் பயன்படும் பல்வேறு வண்ணக் கற்கள் இம்மாவட்டத்தில் கிடைக்கின்றன. சங்க இலக்கியங்களில்