பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

ஈரோடு மாவட்ட வரலாறு


ஒன்றான பதிற்றுப்பத்தில் உழுகின்ற கலப்பையின் கொழு சென்ற வழியிலும், மழை பெய்த மண் அரிப்பிலும், மேய்கின்ற கால்நடைகளின் குளம்புகள் படும் இடத்திலும் கிழங்குகள் தோண்டும் பொழுதும் மணிக்கற்கள் கொங்கு நாட்டில் கிடைக்கின்றன என்று கூறும்.

"நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கில்
இலங்கு கதிர்த் திருமணி பெறும் நாடு"

என்பது அவற்றுள் ஒரு தொடர்.

தாராபுரம், காங்கயம், பெருந்துறை வட்டங்களில் கிடைக்கும் மணிக் கற்களை மதிப்புயர் கற்கள் (Precious Stones), ஓரளவு மதிப்புடைய கற்கள் (Semi-Precious Stones) என இருவகைகளாகப் பிரிக்கலாம்.

வைரக்கற்கள்

இதனை பெரில் (Beryl) என்று அழைப்பர். இவை பச்சை, நீலம், பசு மஞ்சள் என்ற மூன்று நிறங்களில் கிடைக்கின்றன. பச்சைக் கற்களை மாகதம் (Emerald) என்றும் நீலக்கற்களை கடல் நீலக்கல் (Auqa- marina) என்றும், பசு மஞ்சள் கற்களை சந்திர காந்தக் கற்கள் (Moon Stano) என்றும் அழைப்பர். இவை ஒளி ஊடுருவக்கூடிய தன்மையுடையவை. இவை காங்கயம் வட்டம் படியூரில் கிடைக்கின்றன, நொய்யல், கரைப் பகுதிகளிலும் ஓரளவு கிடைக்கின்றன.

சந்திரகாந்தக் கற்களும் ஒளி ஊடுருவும் வெண்படிகக் கற்களும் (Crystals) எளிய நகைகள் செய்யப்பயன்படுகின்றன.

மணிக்கற்கள் (Feldspar)

வெள்ளை, இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் பொதுவாக இவை கிடைக்கின்றன. இவ்வகை கற்களை 'அமேசான்கல்' என்றும் கூறுவர்.

பளிங்குக்கல் (Quarts)

ஈரோடு மாவட்டத்தில் அதிகமாகக் கிடைக்கக் கூடியதும் ஏற்றுமதி செய்யப்படுவதுமாகிய பளிங்குக்கற்கள் ஃபெல்ஸ்பருடன் இலக்குமிநாயக்கன்பட்டி, பாப்பினி, உத்தமபாளையம், பச்சாபாளையம், வெள்ளகோயில், சேனாதிபாளையம் (காங்கயம் வட்டம்) முளையாம் பூண்டி, கம்புளியம்பட்டி, புங்கத்துரை, சூரியநல்லூர் (தாராபுரம்) ஆகிய இடங்களில் கிடைக்கின்றன.