பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

155


(வாய்க்கால்) குளத்திலும் ஏரியிலும் நீர் நிரப்பப்படும். சர்க்கார் பெரிய பாளையம் கல்வெட்டு

"இவ்வூர் அணையும் காலும் பாத்து அணையிலுள்ள நீர்
கீழையில் விழாமல் பாத்து குளத்தில் ஒதுக்கி"

என்றும்,

பரஞ்சேர்வழிக் கல்வெட்டு

"இக்குளத்திற்கு வீரசோழ வளநாட்டு உத்தம சோழச்
சதுர்வேதி மங்கலத்தின் வாய்க்கால் நீர் பாய்வதாகவும்"

என்றும், அணை, கால், குளம் மூன்றும் உருவாக்கியதை சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு

"நொய்யலாற்றில் இந்த வரி அணையும் அடைத்துக் காலும் கண்டு குளமும் அடைத்துப் பயிர் செய்து அனுபவிக்க"

என்றும் கூறுகின்றது.

கொங்கு நாட்டில் சோழர் வருகைக்குப் பின்னர் பாசன வசதிகள் தோற்றுவிக்கப்பட்டன என்று பேராசிரியர் வி. மாணிக்கம் கூறுகிறார். ஆனால் சோழர் காலத்தில் நெடுநாள் பாழ்பட்டுக் கிடந்த குளங்கள் பழுது பார்க்கப்பட்டதாகப் பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

"வாகைப்புத்தூரில் வடக்கு வாசல் வாகைக்குளம் நெடுநாள் பாழ்பட்டுக் கிடக்கிறதாகக் கேட்டோம்"
"வலிப்புறக்கா நாட்டு அநாதி பாழ்கிடந்த குளம் பெரும்புழைக்
சுரை"

என்ற கல்வெட்டுக்கள் சோழர்க்கு முன்பே கொங்கு நாடு பாசன வசதிகள் பெற்றிருந்ததைக் காட்டுகிறது.

ஏற்கனவே பாழ்பட்டுக் கிடந்த குளத்தை குடிமக்கள் பயன்பாட்டுக்கு அரசு அதிகாரிகள் அடைத்துத் திருத்தித் தந்தனர். அங்கு புன்செய் பயிர் செய்த மக்களே குளத்து நீரைப் பயன்படுத்தி நன்செய் பயிர் செய்து மூன்றில் ஒரு பங்கு அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது.