பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

171


பல்பொருள் அங்காடிகள், வாகனங்கள், வாகன பாகங்கள், கட்டுமானப் பொருள்கள், மருந்து வகைகள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், உணவுக்கடைகள், தங்கும் இடங்கள், சிற்றுண்டிச் சாலைகள், இறக்குமதி ஜவுளி ரகங்கள், ஒளிப்படம் எடுத்தல். அச்சகங்கள் முதலிய வாழ்வின் எல்லாக்கூறுகளுக்கும் உரிய தொழில்கள் நடைபெறுகின்றன. தினசரி மார்க்கெட்டும் உழவர் சந்தையும் சிறப்பாக இயங்குகின்றன.

மீன் பிடி தொழில்

உள்நாட்டு மீன்பிடி தொழில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறுகிறது. பவானிசாகர், கொடிவேரி, உப்பாறு அணைகளிலும் அமராவதி, பவானி, காவிரி ஆறுகளிலும் குளங்கள், ஏரிகளிலும் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. 9000 எக்டேர் பரப்பளவில் சுமார் 4000 பேர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு 2250 டன் மீன் பிடிக்கப்படுகிறது.

தாலக்குளத்தில் மீன் குஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. தாலக்குளத்திலும் ஓடத்துறையிலும் எரால் மீன் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. செம்படவம்பாளையத்தில் மீன் பிடி வலை செய்யப்படுகிறது. மீன் பிடிப்போர் கூட்டுறவு சங்கம் அமைத்துள்ளனர். பவானி சாகரில் மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளது. மீன் பண்ணை, மீன் காட்சிக்கூடம், மீன் ஆராய்ச்சி நிலையம் ஆகியனவும் உள்ளன. இந்நிலையங்கள் சென்னை சேத்துப்பட்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு பவானிசாகருக்கு மாற்றப்பட்டன.

கட்டுமானத் தொழில்

தென்னகத்தில் அரசு, பொதுமக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையைப் பெற்ற மிகச்சிறந்த கட்டிட ஒப்பந்தக்காரர்கள் இம்மாவட்டத்தில் பலர் இருப்பது இம்மாவட்டத்தின் சிறப்பாகும். அவர்கள் கடந்த 50 ஆண்டுகளில் போற்றத்தக்க முறையில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான கம்பிகள் தயாரித்தல், கல், மணல், செங்கல் தொழில் ஆகியவற்றில் பலர் ஈடுபட்டுள்ளனர்.