பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

30. வாணிகம்


ஈரோடு மாவட்டப் பகுதியில் தொன்றுதொட்டுச் சிறப்பான முறையில் வாணிகம் நடைபெற்றுள்ளது.

வணிகர் ஊர்கள்

வாணிகத்தில் ஈடுபட்ட பண்டைய வணிகர்கள் தங்கிய இடம் நகரம் எனப்பட்டது. அவர்கள் நகரத்தார் எனப்பட்டனர். 'நிகம' என்பது கொடுமணல் அகழாய்வுப் பானையோட்டில் கிடைத்த ஒரு சொல்; நிகம்-நிகமம்-நகரம் ஆயிற்று என்பர். சோழநாட்டில் நியமம் என்ற பெயரிலும், பொள்ளாச்சி அருகில் நெகமம் என்ற பெயரிலும் ஊர்கள் உள்ளன.

வணிகர்கள் ஊர் 'புரம்' என்றும் அழைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தாளுன்றியான விக்கிரமசோழபுரம், தனிச்சயமான இராசவிச்சாதிரபுரம், அடிக்கீழ்த் தளமான இராசராசபுரம், வில்லவன் மாதேவியான விக்கிரம சோழபுரம், கண்ணபுரமான அபிமான சோழபுரம், காரையூரான திரிபுவனமாதேவிபுரம் என்பன போன்ற பல வணிக நகரங்கள் இருந்தன. முத்தூர் நகரத்தார், குன்றத்தூர் நகரத்தார் எனவும் குறிக்கப் பெற்றனர். புரம்-பட்டினம் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

சாலிய நகரத்தார், வாணிய நகரத்தார் ஆகியோர் முறையே துணி, எண்ணெய் வணிகர்கள் ஆவர்.

வணிக இடங்கள்

பொருள் விற்கும் இடங்கள் கடை, அங்காடி, மடிகை, தளம், தாவளம், பெருந்தெரு எனப்பலவாறு அழைக்கப்பட்டன. டணாயக்கன் கோட்டைக் கல்வெட்டில் கடையில் விற்கும் புடவை என்ற தொடர் காணப்படுகிறது. ஈரோட்டு ஆவணம் ஒன்றில் அங்காடி என்னும் பெயர் வருகிறது. மடிகை என்பது நகரத்தின் அங்கமாகும். தளம், அடிக்கீழ்த்தளம், வீரதளம் எனவும் கரையான அடிக்கீழ்த்தளம் எனவும்