பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

173


குறிக்கப்பெறும். தாராபுரம் வட்டக் கொற்றனூர் கொற்றமங்கலமான மஞ்சிப்புளித்தாவளம் என அழைக்கப்பட்டது. ஈரோட்டில் இராசராசப் பெருந்தெரு, இரட்டருமொழிப் பெருந்தெரு என இரு வணிக மையங்கள் 13ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளன.

சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டில் 18 பட்டினம், 32 வளர்புரம் 04 கடிகைத்தாவளம் என்று கூறப்படுகிறது. பெரிய நகரம் 'மாநகரம்' எனப்பட்டது. சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு கொங்கின் ஒன்பது மாநகரங்கள் என்று கூறுகிறது.

செட்டி

வணிகர்கள் செட்டி எனவும் அழைக்கப்பட்டனர். இச்சொல் 'சிரேஷ்டி' என்ற வடசொல்லின் திரிபு என்பர். அது தவறு. மணிமேகலையில் 'செட்டு' என்ற சொல் வணிகத்தைக் குறிக்கிறது. செட்டு செய்பவன் 'செட்டி' ஆனார். செட்டிகள் சிலர் உயர்பதவியிலும் இருந்துள்ளனர். பிரமியம் கல்வெட்டில் கோக்கலிமூர்க்க விக்கிரமசோழனின் உயர் அலுவலனாக

"வடகரைத் திருக்கழுமல வளநாட்டு நந்திய நல்லூருடையான் வீரசங்காதச் சுற்றிய தேவன் வானவன் உத்தரமந்திரியான நானாதேசிய நாட்டுச் செட்டி" என்பவன் குறிக்கப்பட்டுள்ளான்.

திங்களூர்க் கல்வெட்டில் "அறத்துனான் தேவன் பொன்னனான கணித மாணிக்கச் செட்டி" என்பவன் குறிக்கப் பெறுகின்றான். காவேரிபுரம் கல்வெட்டில் 'கன்னரதேவ மாயிலட்டி' என்ற வணிகர் 'மாசெட்டி' எனக் குறிக்கப் பெறுகிறாள்.

வணிகக் குழுக்கள் நானாதேசி, தேசி, திசையாயிரத்து ஐநூற்றுவர், பதினெண் விஷயத்தார்,பெருநிரவியார், அய்யபொழில் எனப் பல்வேறு வகை வணிகரும் ஈரோடு மாவட்டப் பகுதியில் வாணிகம் செய்துள்ளனர். 'தேசி' உள்நாட்டு வணிகர், 'நானாதேசி' வெளிநாடுகளிலும் வாணிகம் செய்வோர் ஆவர். நானாதேசி திசையாயிரத்து ஐநூற்றுவர் குழுக் கல்வெட்டு ஈரோடு மாவட்டம் பழமங்கலத்தில் உள்ளது. சர்க்கார்