பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

ஈரோடு மாவட்ட வரலாறு


ஏற்பட்டன. கலெக்டர் பள்ளியில் பயிற்சி பெற்ற ஆசிரியர் மாதம் 15ரூ சம்பளத்தில் பணியாற்றினார். ஆங்கிலமும் வட்டார மொழியும் கற்பிக்கப்பட்டன, தாசில்தார் பள்ளியில் மாதம் ஒரு சம்பளத்தில் பயிற்சி பெறாத உள்ளூர் ஆசிரியர் பணியாற்றினர். அவர்கள் 'டியூசன்” எடுத்து வருமானம் பெறலாம். கலெக்டர் பள்ளி கோயமுத்தூரிலும் தாசில்தார் பள்ளி கோயமுத்தூரிலும் சத்தியமங்கலத்திலும் ஏற்பட்டது. கோவை மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் இத்திட்டம் தோல்வியடைந்தது.

நிர்வாகப் பணிக்கு ஆட்களின் தேவை கருதியும் ஆங்கிலம், ஆங்கில இலக்கியம் அறிவியல் ஆகியவைகளைப் பரப்ப வேண்டியும் கிழக்கிந்தியக் கும்பினி இயக்குநர்கள் 1330ஆம் ஆண்டு பொதுமக்களுக்கு விரிவாகக் கல்வி தரத் தீர்மானித்தனர். மெக்காலே பிரபு வகுத்த கல்வித்திட்டம் வில்லியம் பெண்டிங் பிரபுவால் 7.3.1935இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கலெக்டர், தாசில்தார் பள்ளிகள் நிறுத்தப்பட்டன.

சென்னைப் பல்கலைக்கழகம் "உள்நாட்டுக் கல்விக் குழுவை" 1840ல் எல்பின்ஸ்டன் பிரபு தலைமையில் அமைத்தது. இக் குழுவின் அறிவுரைப்படி, 1841ல் இ.பி.பவல் என்பவரைத் தலைவராகக் கொண்டு முதல் பள்ளி தொடங்கப்பட்டது. 1854இல் வெகு ஜனக் கல்வியனிக்க கம்பெனி முடிவு செய்தது. 1855ஆம் ஆண்டு மாநிலக் கல்லூரியில் கல்வித்துறை ஏற்படுத்தப்பட்டு ஒரு கல்வி இயக்குநர் 4 கல்வி ஆய்வாளர்கள், 20 உதவி ஆய்வாளர்கள், 20 துணை உதவி ஆய்வாளர் அல்லது தாலுக்கா மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டனர்.

இதற்கு முன்பே கோவை கலெக்டர் இ.பி.தாமஸ், ஐரோப்பியர், இந்தியர் உதவியோடு கோவையில் ஒரு பள்ளி தொடங்கியிருந்தார். 1858இல் சேயூரிலும் 1859 ஏப்ரலில் பொதுமக்கள் அளித்த 1050 ரூபாய் நன்கொடையைக் கொண்டு பொள்ளாச்சியிலும் 1859 ஆகஸ்டு மாதம் உடுமலைப்பேட்டையிலும் தாராபுரத்திலும் 1860இல் ஈரோடு, ஆனைமலை சத்தியமங்கலத்திலும் தாலுக்கா பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1861இல் சேயூர் பள்ளி மூடப்பட்டது. மாணவர் வருகைக் குறைவால் 1864இல் ஆனைமலைப் பள்ளியும் மூடப்பட்டது. கிறித்துவ மிஷனரிகளும் மாவட்டத்தில் பல பள்ளிகளைத் தொடங்கினர்.