பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

31. கல்வி நிலை


பிரிட்டிஷ் பாராளுமன்றம் 1813ஆம் ஆண்டு இந்தியாவிற்குக் கல்வி ஊக்குவிப்புத் தொகையாக 1 இலட்சம் ரூபாய் அளித்தது. அதன் விளைவாக 1822ஆம் ஆண்டு சர் தாமஸ் மன்றோ மாநில அளவில் கல்வி பற்றிய கணக்கெடுப்பு நடத்தினார். அன்று கொள்ளேகால், கரூர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மக்கள் தொகை 6,38,199 ஆகும்.

மாவட்டம் முழுவதும் உள்ள 938 கிராமப் பள்ளிகளில் 8930 மாணவ, மாணவிகள் கல்வி கற்றனர். மக்கள் தொகையில் 1.39% பேரே கல்வி கற்றனர். 8930 பேரில் 1642 பேர் பிராமண மாணவர்கள், 6976 பேர் பிராமணர் அல்லாதவர்கள் 312 பேர் முஸ்லிம்கள். பள்ளிக்குச் சென்ற மாணவிகள் மாவட்டம் முழுவதும் 62 பேரேயாவர். அவர்களில் பெரும்பாலோர் கைக்கோளர் இனத்தைச் சேர்ந்தவர்கள். கணக்கும். எழுதப்படிக்க மொழியும் மட்டுமே கற்பிக்கப்பட்டன (எண்ணும், எழுந்தும்).

ஐந்து வயது முதல் 13 அல்லது 14 வயது வரை மாணவர்கள் கற்றனர். பெரும்பாலும் இராமாயணம், பாரதம், புராணங்கள், சமய நூல்கள், பஞ்ச தந்திரக் கதைகள் கற்பிக்கப்பட்டன. காலை 6 மணி முதல் 10 மணி வரையும் பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரையும் வகுப்புகள் நடைபெற்றன. ஆசிரியர்களுக்கு வருடம் 3 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை இடத்திற்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்பட்டது. அக்கிரகாரங்களை அடுத்து வேதபாடசாலை இருந்தது. 15 வயது தொடங்கி அங்கு பிராமண மாணவர்கள் தத்துவம், சட்டம், வேதம், வானவியல், வடமொழி கற்றனர்.

முக்கியப் பண்டிகை நாட்களும், பவுர்ணமி, அமாவாசையும் அதற்கு அடுத்த நாளும் விடுமுறை நாட்கள். தசராவின் போதும் பிற பண்டிகை நாட்களிலும் ஆசிரியர் பெற்றோரிடமிருந்து அன்பளிப்புகள் பெறுவர். 1822இல் மன்றோ கணக்கெடுப்பிற்குப் பின் கோவை மாவட்டத்தில் ஒரு கலெக்டர் பள்ளியும் இரு தாசில்தார் பள்ளிகளும்