பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

33. நாட்டுப்புறவியல்


மக்கள் வழக்காக வழங்கும் வட்டாரச் சொற்கள், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி போன்றவற்றை 'நாட்டுப்புறவியல்' அல்லது 'நாட்டாரியல்' என்று குறிப்பிடுவர். ஈரோடு மாவட்டப் பகுதியில் வழங்கப்பெறும் 'நாட்டுப்புறவியல்' தனித் தன்மை வாய்ந்தவை.

இம்மாவட்ட மக்கள் சொல்லுக்குச் சொல் "ங்க" சேர்த்து மரியாதையாகப் பேசுவர். 'ஆமாங்க' 'எப்பங்க வந்தீங்க' என்பது போல அவை அமையும். அடுத்தவர்கள் பேசும்போது காது கொடுத்துக் கேட்பதோடு இடையிடையே "ஆமாங்க” “சரிங்க” என்று சொல்லுவதும் இம்மாவட்ட மக்கள் வழக்கம், இவை கொங்கு நாட்டுக்கே பொதுவானவை.

வட்டார வழக்குகள்

(1) ரவுசு - பேரொலி, பேரோசை
 "மேக்கு வளுவிலே ஒரே ரவுசாக் கெடக்குது"

(2) அங்கராக்கு - மேல் சட்டை
 "சந்தையிலே வாங்கின அங்கராக்கு சிறுசாப் போச்சு"

(3) பொழுதனிக்கு - அடிக்கடி
 "ஏண்டா பொழுதனிக்கு தொந்தரவு பண்றே"

(4) முச்சூடும் - எல்லாம்
 "பயிரு முச்சூடும் மாடு மேஞ்சிடுச்சு"

(5) ரக்கிரி - கீரை
 "ராயிக் களிக்கு ரக்கிரி கடைஞ்சா ருசிக்கும்"

(5) பொடக்காணி - வீட்டின் பின்புறக் கொல்லை
 "குப்பயெக் கொண்டுபோய் பொடக்காணியிலே கொட்டு"

(7) அப்பளையாவே - அப்பொழுதே

 "மாமெ அப்பளையாவே வந்தாங்க"