பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

ஈரோடு மாவட்ட வரலாறு


சின்னமுத்தூர்ப் பெண்கள்

முத்தூர் முத்தன் குலத்தில் நோன்றிய குமராயி என்ற பெண் குழந்தை சின்னமுத்தூர் செல்லக்குமாரனிடம் பேரன்பு பூண்டு பணிவிடை செய்து வந்தாள். நாளடைவில் செல்லக்குமாரனையே குருவாக ஏற்று சின்னமுத்தூரில் மடம் ஒன்றை ஏற்படுத்தி சமயப்பணி செய்து வந்தாள். குமராயி ஏற்படுத்திய மடமே பின்னர் செல்லக்குமார சாமி கோயிலாக மாறியது.

குமராயியின் சமயப்பணிகளுக்கு மணிய குலத்தில் தோன்றிய அத்தாய், முத்தாய், செல்லாய் என்னும் மூன்று பெண்கள் மிகவும் உறுதுணையாக இருந்தனர். மூவரும் துறவுக் கோலம் பூண்டு கிராமப் புறங்களுக்குச் சென்று உணவு தானியங்கள் சேகரித்துப் பொதி மாடுகள் மூலம் சின்னமுத்தூருக்குக் கொண்டு வருவர். அவை குமராயி திருமடத்தில் ஏழை, இரவலர், பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பயன்படும். இந்நால்வரின் பல்வேறு சமயப்பணிகள் பெருகின. இவர்கள் அடக்கத்தலங்கள் வழிபடப்பட்டு வருகின்றன.

ஆலயத் திருப்பணி

தாரமங்கலம் வணங்காமுடித் கெட்டி முதலியார் மனைவி சின்னம்மையாரும். தக்கை இராமாயணம் பாடிய பத்தர்பாடி எம்பெருமாள் கவிராயரின் மனைவியார் பூங்கோதையும் தமிழ் கற்று புலவராக விளங்கினர். இருவரும் "கண்ணொளி கதிரொளி" என்ற அத்வைத நூல் எழுதியுள்ளனர். பவானி நண்ணாவுடையார் கோயிலில் இருவரும் பல திருப்பணிகள் செய்தனர். அதைக்குறிக்கும் கல்வெட்டுக்கள் பவானிக் கோயிலில் உள்ளன.

நாட்டுக் கணக்கு

வடகரை நாட்டில் கணக்கு அதிகாரியாகப் பூங்கோதை பணியாற்றியுள்ளார். இதனைத் தூக்கநாயக்கன்பாளையம் செப்பேடு கூறுகிறது. அதில் "வடகரை நாட்டுக் கரணிக்கம் பூங்கோதை" என்ற தொடர் வருகிறது. பூங்கோதை திருச்செங்கோட்டுக்குறவஞ்சி பாடியும் உள்ளார்.