பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

ஈரோடு மாவட்ட வரலாறு


இறப்பு விகிதம் - 1000 நபருக்கு 1884இல் 96ஆக இருந்தது. இப்போது 6.7ஆகக் குறைந்துள்ளது (2000).

விடுதலைக்குப்பின் ஏற்பட்ட பல்வேறு மக்கள் நலப்பணிகளே இதற்கும் காரணம். 1871ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நகராட்சி வளர்ச்சிச் சட்டம், ஸ்தல ஸ்தாபன நிதிச் சட்டம் ஆகியவற்றால் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள வழி கிடைத்தது. 'தல நிதி மருத்துவமனைகள்' (Local Fund Hospital) ஏற்படுத்தப்பட்டன. சுகாதாரப் பணிகளுக்கும் முன்னுரிமை தரப்பட்டது.

நகராட்சிகள் தெருக்களைச் சுத்தம் செய்தன. நீர்நிலைகளைத் தூய்மை செய்தன. 1884ஆம் ஆண்டு சட்டப்படி நகராட்சிகளால் விழாக்கள், சந்தைகள், பண்டிகைகள் மக்கள் கூடும் இடத்தில் நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாக்கடை, குப்பைத் தொட்டி, கழிப்பறைகள், ஆடு வெட்டும் இடங்கள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டது. 1923ஆம் ஆண்டு ஈரோடு, தாராபுரம் ஆகிய நகராட்சிகளில் நகர்நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். 1928இல் 'பிளேக்' இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர். குடிதண்ணீரைப் பாதுகாக்கவும் சாக்கடையைச் சுத்தம் செய்யவும் 1947இல் தனிச்சட்டம் இயற்றப்பட்டுச் செயலாக்கப்பட்டது. மக்கள் கொடிய நோய்களைக் 'கொள்ளை நோய்கள்' என்று அழைத்தனர்.

1954ஆம் ஆண்டு புதியதாக ஏற்படுத்தப்பட்ட கீழ்பவானித் திட்டப்பகுதிகளில் குறிப்பாக ஈரோடு, பவானி, பெருந்துறை, சித்தோடு, சென்னிமலைப் பகுதிகளில் கடுமையான மலேரியா பரவியது. இதற்கெனத் தமிழக அரசு தனி நடவடிக்கை எடுத்தது. 1958ல் தேசிய மலேரியா ஒழிப்புச் சட்டப் பணிகளின் மூலம் அனேகமாக மலேரியா மறைந்தது. 1951இல் தொடங்கப்பட்ட முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் மருத்துவப் பணிகளுக்காகப் பெரும் தொகை ஒதுக்கப்பட்டது.

1979இல் ஈரோடு மாவட்டம் ஏற்பட்டது. ஆனால் 1972லேயே மாவட்ட மருத்துவமனைப் பணிகள் இங்கு தொடங்கப்பட்டுவிட்டன.