பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

241


'மங்கல வாழ்த்து' பாடும் உரிமை இவர்களுக்கு உண்டு. வேளாளர் 'ஏர்' வரி கொடுத்தது போல இவர்களும் 'அடப்பவரி' கொடுத்துள்ளனர்.

வன்னியர்

கன்னிவாடிப் பட்டயத்தில் இவர்கள் "பள்ளிவெள்ளாளன்" என்று குறிக்கப்படுகின்றனர். அம்மரபில் 'கோபாலகவுண்டர்' பெயர் குறிக்கப்பெறுகிறது. அவர் நாட்டாண்மைக்காரராக இருந்துள்ளார். வன்னிய கவுண்டர், வன்னியகுலக் கட்டிக்கவுண்டர் ஆகியோர் ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர்.

இடையர்

'கோன்' என அழைக்கப்படும் இவர்கள் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டவர்கள். இவர்கள் சபைக்கு 'திருவாய்ப்பாடி நாடு' என்று பெயர். கி.பி. 922இல் முதல் பராந்தகனின் ஈரோட்டுக் கல்வெட்டில் அச்சபை குறிக்கப்படுகிறது.

வாணியர்

எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்ட இவர்கள் விளக்கெரிக்க எண்ணெய் கொடுத்துள்ளனர். விளக்குக் கொடைகள் பெரும்பாலும் அனைத்தும் பொற்காசுகளே ஈரோடு மாவட்டத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால் 'விளக்கெரிப்பதில் இவர்கள் பங்கு மிக அதிகம்', இவர்கள் சபை ‘வாணிய நகரம்' எனப்படும். இவர்கள் 'மாயிலட்டி' பட்டம் பெற்றவர்கள்.

தேவர்

தென் பாண்டிய நாடு வாசுதேவ நல்லூரிலிருந்து வெளியேறிய அகம்படியத் தேவரில் குருலிங்கராசாவின் மூத்தமகன் சங்கரலிங்க ராசா தலைமையில் கொங்கு நாடு வந்து தாராபுரம், காடையூர், காங்கயம் வழியாகப் பரவி வாழ்ந்தனர். பழைய கோட்டைப் பட்டக்காரருக்கு உதவி அவர்கள் காணியான கொடுமணல் காணியைப் பெற்றனர். நொய்யல் அணையைப் பழுது பார்த்தவர்கள்.