பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

ஈரோடு மாவட்ட வரலாறு


பல உரிமைகளைப் பெற்றனர். வெள்ளோடு கம்மாளர்கள் இலக்கியம் பெற்றவர்கள்.

குடும்பர்

மல்லிகுந்தம் பட்டயம் இவர்களை "தேவேந்திரப்பள்ளர்" என்று குறிப்பிட்டு இவர்கள் வெள்ளைக்குடை, வெண்சாமரம் உடையவர்கள் என்று கூறுகிறது. வேளாண்மையில் தேர்ந்த இவர்கள் "நெல்லின் மக்கள்” எனப்பட்டனர். மள்ளர் எனவும் அழைக்கப்படுவர். இவர்களுக்கு 'பண்ணாடி' பட்டமும் உண்டு. அரசனால் உயர் பட்டம் பெற்ற இவர்கள் ஊராளிகளாகவும் இருந்துள்ளனர். குண்டடம், கீரனூரில் இவர்கள் கல்வெட்டுக்கள் உள்ளன. பெண்கள் 'குடுமிச்சி' எனப்படுவர்.

வேட்கோவர்

"மண்ணுடையார்" எனக்குறிக்கப்படும் இவர்களை ஆவணங்கள் 'கொங்குத் திருநீலகண்டர்' என்றும் குறிக்கிறது. சில நாடுகள் தங்களுக்குக் காணியுரிமையுடையதாகப் பெருந்தலையூர், முத்தூர்க் கல்வெட்டுக்களில் கூறுகின்றனர். மதுக்கரைப் பட்டயம் இவர்களுக்கு எல்லாச் சமுதாயமும் கொடுக்க வேண்டிய தொகை, பொருள் பற்றிக் குறிப்பிடுகிறது.

பண்டாரம்

கோயில் பூசைகளை மேற்கொள்ளும் இவர்கள் 'ஆண்டிகள்' எனவும் குறிக்கப்படுவர். உவச்சாண்டி, கோவணாண்டி என இரு பிரிவினர் உண்டு. இடைக்காலத்தில் கோயில் பணியாளர்களாகக் குறிக்கப்பட்ட உவச்சர், கோவணர் ஆகியோர் இவர்கள் முன்னோர்களாக இருக்கலாம். குறுப்பாண்டி என்போரும் உண்டு.

நாவிதர்

மருத்துவ குலத்தார் என்று அழைக்கப்படும் இவர்கள் 'மங்கலன்', 'குடிமகன்' என்றும் கூறப்படுவர். கொங்கு வேளாளர் திருமணங்களில்