பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

பண்டைய வரலாறு நமக்குப் பாடமாக அமைந்து இக்கால வாழ்வைச் செம்மைப்படுத்தி எதிர்கால நல்வாழ்விற்கு வழிகாட்டக் கூடியது. முன்னோர் வரலாற்றை அறியாத மக்கள் எதிர்கால மக்களுக்கு வழிகாட்டும் வண்ணம் வரலாற்றைப் படைக்க முடியாது. முன்னோர் நடந்த பாதை தெரிந்தால்தான் நாம் சரியான பாதையில் நடக்க முடியும். எனவே ஒரு நாட்டின் வரலாறு தொகுக்கப்படுவது இன்றியமையாதது.

ஒரு நாட்டின் வரலாற்றில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் உரிய தனிப்பட்ட சிறப்புச் செய்திகள் முழுமையாக இடம்பெறுவது இயலாது. பொதுச் செய்திகளே இடம் பெற வாய்ப்புள்ளது. எனவே வட்டார வரலாறுகள், உள்ளூர் வரலாறுகள் தொகுக்கப்படுதல் மிகவும் அவசியமானதாகும். இம்முயற்சியில் உழைக்க ஆய்வாளர்கள் பலர் அண்மையில் முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செயலாகும். வட்டார வரலாற்றின் முக்கியத்துவம் கருதி புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தினர் அண்மையில் நாடு தழுவிய ஒரு பயிலரங்கம் நடத்தினர்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு ஆவணக் காப்பகம் மாவட்டம்தோறும் 'விவரச் சுவடி' (District Gezetteer) வெளியிட்டுள்ளனர். வெளிவந்த நாட்டு வரலாற்று நூல் செய்திகளும், பல்வேறு அரசுத் துறைகள் அளிந்த செய்திகளும் மட்டுமே அவற்றில் அடங்கியுள்ளது. அவை ஆங்கிலத்திலேயே உள்ளன. இரண்டொரு மாவட்டத்திற்கு மட்டுமே தமிழ்ப்பதிப்பு வெளிவந்துள்ளது. புதிய மாவட்டங்கள் பல ஏற்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு விவரச் சுவடிகள் தொகுக்கும் பணிகள் வேகமாக நடைபெறவில்லை.

பயண எழுத்தாளர் 'சோமலெ' தொகுத்தளித்த மாவட்ட வரலாறுகள் மிகச் சிறப்புடையவை. ஆனால் அரசின் திட்டங்கள், அதன் வளர்ச்சி இவைகளுடன் அவர் பயணத்தில் கண்டு, கேட்ட நிகழ்வுகள் மட்டுமே