பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

ஈரோடு மாவட்ட வரலாறு


தமிழ்ப் பண்பாட்டின் தலைநகராகவே விளங்கியிருப்பதை நிறுவுகின்றன.

பவானியாற்றில் நீர் குளிர்ந்து பாய்வதற்குக் காரணம் சந்தன மரங்கள் மிதந்து வந்ததாகவும், பெண்கள் தங்கள் அணிகலன்களை மறந்து அல்லது தொலைத்துவிட்டால் தெளிந்த ஆற்று நீர்வழி கண்டுபிடிப்பது குறித்த செய்திகளையும் படிக்கும் பொழுது ஏக்கமே மிகுகின்றது. திப்புசுல்தான் சந்தன மரங்களை "அரச மரங்கள்" (Royal Trees) என அறிவிக்கை செய்து பாதுகாக்க முயற்சித்தது, அவருடைய சமய நல்லிணக்க முயற்சிகள் என வரலாற்றுத் தகவல் களஞ்சியமாகவே இந்நூல் திகழ்கிறது.

மதுரை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அவர்தம் ஆட்சிப் பரப்பு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதற்குக் காரணம் மதுரைக் கோட்டையிலிருந்த 72 கொத்தளங்கள் என்ற செய்தி வியப்பைத்தருகிறது. மெக்காலே கல்வித் திட்டத்திற்கு முன்னதாகவே 'கலெக்டர் பள்ளி', 'தாசில்தார் பள்ளி' என அமைப்புகள் நிறுவப்பட்டதும் ஈரோடு மாவட்டத்தில் என அறியும்போது வியப்பு எல்லை மீறுகிறது.

இப்பகுதியைச் சார்ந்த வரலாற்று நாயகர்கள் அனைவரும், காலிங்கராயன், தீரன் சின்னமலை முதல் தந்தை பெரியார் வரை இந்நூலில் கம்பீரமாக வலம் வருகிறார்கள்.

பழங்காலத் தொல்லுயிரி எச்சங்களிலிருந்து, தற்காலப் பொறியியல் கல்லூரிகள் வரை விவரங்கள் அனைத்தும் அடங்கிய இத்தகவல் களஞ்சியம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இம்மாவட்டத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் என உறுதியாய் நம்புகிறேன்.

நூலாசிரியர்க்கு என் வாழ்த்துக்கள்,

ஈரோடு, அன்புடன்,

07.06.2007. த. உதயச்சந்திரன்