பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

19. கும்பினி ஆட்சிக் காலம்


(கி.பி. 1799-1858)

இந்திய வரலாற்றில் 16.4.1609, 4.5.1799 ஆகியவை மிக மிக முக்கியமான நாட்களாகும். 1599இல் இங்கிலாந்தில் ஏற்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பினி சார்பில் 1608இல் முதலில் தலைமை தாங்கி வந்த வில்லியம் ஹிக்கிசிற்கு இந்தியாவில் விற்பனையைத் தொடங்க டில்லி ஜிகாங்கீர் அனுமதி கொடுத்த நாள் 16.04.1609, 1611இல் மசூலிப் பட்டணத்தில் தங்கள் குடியிருப்பை நிறுவிய கும்பினியார் முதல் தொழிற்சாலையை 1613இல் சூரத்தில் தொடங்கினர். 1640ல் சென்னையில் குடியேறி டச்சுக்காரர்களையும், பிரெஞ்சுக்காரர்களையும் வென்று படிப்படியாக அதிகாரத்தைப் பரப்பிய கும்பினியார் தென்னிந்தியாவில் கடைசியாக அவர்களை எதிர்த்த திப்பு சுல்தானை 4.5.1779இல் கொன்று தங்கள் ஆட்சியை நிலைநிறுத்தினர்.

7.11.1800இல் ஈரோடு வந்த ஆங்கிலேயப் பயணி புக்கானன், “ஐதர் ஆட்சித் தொடக்கத்தில் ஈரோட்டில் 3000 வீடுகள் இருந்தன. திப்பு காலத்தில் பெரும்பகுதி அழித்து 1000 வீடுகள் இருந்தன. ஜெனரல் மெடோஸ் ஈரோட்டை முற்றிலுமாக அழித்து விட்டான். இப்போது 400 வீடுகள் தான் உள்ளன. ஈரோடு மீண்டும் உயிர் பெற்று வருகிறது" என்று கூறியுள்ளார்.

கும்பினியின் வெற்றிக்கு ஐதராபாத் நிஜாம், மராட்டியர், ஆர்க்காடு நவாப் ஆகியோரின் படை உதவி மட்டும் காரணமல்ல; ஐதர், திப்புவின் வரிக் கொள்கையாலும் அதிகாரிகள் கெடுபிடியாலும் படையினரின் கொள்ளை, கொலையாலும் பாதிக்கப்பட்ட கொங்கு நாட்டுப் பாளையக்காரர்கள் கும்பினியை மிகப் பெரும்பாலோர் எதிர்க்காமல் வரவேற்றனர்.

ஐதர் காலத்தில் கொங்கு நாட்டில் அவர் வசூலித்த வரிப்பணம் 761094 பகோடாக்கள் (2666664 ரூபாய்) ஆகும்.