பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்படும்போது ஒரு சூளுரை செய்தார். இந்தக் கடன்களை எல்லாம் திருப்பிக் கொடுக்கும் வரை இந்த ஊர் மண்ணை மிதிக்க மாட்டேன்' என்று அவர் சபதமிட்டார். அவர் உள்ளம் எத்தகைய நேர்மையில் ஊறிய திருவுள்ளம் என்பதை உலகுக்கு உணர்த்தப்போதுமான சான்றாகும் இந்நிகழ்ச்சி. ஊரைவிட்டுத் தன்மானம் ஒன்றையே துணைக்கழைத்துக் கொண்டு புறப்பட்ட கவிஞர் மதுரை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளைச் சென்றடைந்தார். அவரிடம் முறையாக யாப்பிலக்கணம் முழுவதும் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தார். நாடக மன்றங்கள் நிறைந்தது மதுரை. இவருடைய ஆற்றலை நன்குணர்ந்ததனால் இருகரம் நீட்டி இத்தமிழ் மகனைத் தமிழ் மதுரை இணைத்துக் கொண்டது. அப்போது கவிஞர் பல நாடகங்களுக்கு உரையாடல்களும், பாடல்களும் எழுதிக் குவித்தார். அதேசமயம் தேசத்தில் எரிந்த தேசியக் கனல், கவிஞரையும் பற்றிக் கொண்டது. நாட்டில் சுதந்திர வேள்வித் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியிருந்தது. தன் பங்காக ஏராளமான தேசிய உணர்வுப் பாடல்களை எழுதி அன்றைய மேடைகள் தோறும் முழங்க வைத்தார் கவிஞர். ஒருமுறை மதுரை நாடக சங்கத்தார் இவர் கலைத்திறத்தைப் பாராட்டி வழங்கிய ஆயிரம் ரூபாய்க்கும் புத்தகங்களாக வாங்கி வந்துவிட்டார். ஊரில் உள்ள கடன் தொகைகளின் நினைவு அப்போது வரவில்லை! மீண்டும் பொருள் ஈட்டினார். ஈட்டிய பணத்தை எடுத்துக் கொண்டு மதுரையிலிருந்து ஊர் திரும்பினார். அன்று உரைத்த சூளுரை நினைவுக்கு வரவே ஊருக்கு வெளியே இருந்து கொண்டு, கடன் கொடுத்தவர்கள் அனைவரையும் அழைத்து வரச் செய்தார். அவரவர்க்குரிய தொகைகளைச் செலுத்திய பிறகே, தான் பிறந்த ஊர்மண்ணை மிதித்தார் கவிவாணர். கவிராயர் வாழ்வில் நிகழ்ந்த இந்த அரிய நிகழ்ச்சியொன்றே அவர் எத்தகைய நேர்மை நெஞ்சம் சுமந்தவர் - எத்தகைய மான உணர்வும் சத்தியத்தேக்கமும் கொண்ட மாவீரரர் என்பதை உலகுக்கு உணர்த்தப் போதுமானதாகும். xvii