பக்கம்:உணர்வின் எல்லை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் ஒரு புரட்சியாளர்

101

தார். புத்தரின் உள்ளத் துடிப்பு—அரச குடும்பத்தில் பிறந்து, அறவுணர்வின் முதிர்ச்சியால் துறவு நெறி மேற்கொண்ட அவ்வண்ணலின் இதயத் துடிப்பு—பிம்பிசாரனின் யாகத்தையே கலைத்தது; புரட்சி புரிந்தது ; கருணை வெள்ளம் பெருக்கெடுத்தோடச் செய்தது. வள்ளுவர் செய்த புரட்சியோ—அறிவுலகப் புரட்சியோ அழியா இலக்கிய வடிவம் பெற்றது ; கற்பார் நெஞ்சையெல்லாம் உருக்கும் ஆற்றல் பெற்றது ; உயிர்க்கொலை புரியும் ஈன வாழ்வு நாளடைவில் தொலைய வழிகோலியது ; ஒரு நாள் ஓரிடத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு மட்டுமன்றி, எந்நாளும், எவ்விடத்திலும், எச்சூழ் நிலையிலும் பயன்படத்தக்க பாங்கினைப் பெற்றது.

‘அவிசொரிந் தாயிரம் வேட்டலின், ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று,’

இரண்டே அடிகள் கொண்ட இப்பாடலில் வள்ளுவர் உள்ளம் புலனாகிறதன்றோ? அவர் நெஞ்சம் துடித்த துடிப்பு விளங்குகிறதன்றோ? அவர் - மனம் எவ்வளவு குமுறியிருந்தால், அவர் சொல்ல விழைந்த உண்மை இவ்வளவு வேகத்தோடு வெளிப்பட்டிருக்கும்? ‘ஆயிரம் வேட்டலின்’ என்று சொல்லும் போதும், ‘ஒன்றன் உயிர்’ என்று கூறும்போதும் அச்சான்றோர் மனத்திலிருந்த கோபமும், கருணையும் பிரிட்டுக் கொண்டன்றோ வெளிவந்து சொல்லுருவம் பெறுகின்றன?

தமிழ் மக்களின் கலாசார சமய வாழ்க்கையில் புகுந்ததொரு கேட்டினை நீக்க வள்ளுவரின் புரட்சி