பக்கம்:உணர்வின் எல்லை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளுவர் ஒரு புரட்சியாளர்

192

வேண்டும். அத்தகைய பொருளாதார அமைப்பு உண்மையில் பலமுடையதாய் விளங்கவேண்டும் என்றால், அது, ‘சமதர்ம’ அடைப்படையில், ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்’ நெறியில் எழுந்ததாகவே இருக்க முடியும். இன்றைய நூற்றண்டிற்கு மட்டுமேயன்றி எந்த நூற்றாண்டிலும்—உலக முழுவதற்கும் பயன் தரவல்ல இவ்வுண்மைகளை,

‘குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு.’

‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.’

என்ற அருமைக் குறள் வெண்பாக்களில் அழகுறக் கூறியுள்ளார் திருவள்ளுவர். இத்தகைய ஓர் இலட்சிய சமுதாயத்தைக்காண விழைந்த வள்ளுவர், ஒரோவழி நாட்டில் கொடுங்கோலின் பேயாட்டம் நிகழுமேல் என் செய்வது என்பதற்கும் வழிகாட்டுகிறார். ‘அவ்வழிப்பட்ட ஆட்சியை அழிப்பதற்குப் புரட்சி ஒன்றுதான் வழி,’ என்பது அவர் கருத்து. ஆயினும், அப்புரட்சி, ஆற்றல் மிக்கதாய்—கருதிய பயனைக் கைகூடச் செய்யும் தகுதிபடைத்ததாய்—விளங்க வேண்டுமாயின், அது அறவழிப்பட்ட புரட்சியாய்—அல்லற் பட்ட மக்கள் ஆற்றாது சிந்தும் கண்ணீரினின்றும் கிளர்ந்தெழுந்த புரட்சியாய் விளங்க வேண்டும் என்பதே வள்ளுவர் உள்ளம்.

‘அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை?’