பக்கம்:உணர்வின் எல்லை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

உணர்வின் எல்லை

2

பக்திப் பாசுரங்களுள் தனிச்சிறப்பு வாய்ந்தது நாலாயிரப் பிரபந்தம், ‘ஈடு’ கண்ட ஈடில்லா இலக்கியம் அன்றோ, ஆழ்வார்கள் அருளிச் செயல்! பெருமான் காதலிலே ஆழ்ந்த ஆழ்வார் பன்னிருவர் பாடிய பக்திப் பாசுரங்களின் திரட்டே நாலாயிர திவ்யப் பிரபந்தம். அப் பிரபந்தத்தில் முதலிடம் பெறும் சிறப்பு வாய்ந்த, ‘பாகவத சார’மாகிய பெரியாழ்வார் திருமொழியின் பெரும்பகுதி கண்ணனை—மணிவண்ணனைக் குழந்தையாகப் பாவித்துக் கொண்டாடும் அழகும் திறமும் வாய்ந்தது. பன்னூறு பாடல்களால் தெய்வக்குழந்தை கண்ணன் திறமெலாம் போற்றும் ஆழ்வார் பாடல்களுள் ஒன்றைக் காணலாம்.

தென்புதுவைப் பட்டராகிய பெரியாழ்வார், கண்ணனது திருமேனி அழகை அடிமுதல் முடிவரை முன்னம் யசோதை அனுபவித்ததுபோல் அனுபவிக்கிறார். முதல் பாட்டிலே அந்தப் ‘பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக் கமலங்களைப் பார்த்து அனுபவித்தவர், அடுத்த பாசுரத்தில் அப்பாதங்களில் பொருந்தி இருக்கும் பத்து விரல்களையும் பார்த்துப் பார்த்து அதிசயிக்கிறார்! ஆனந்த வெறி கொண்டு பாடுகிறார். இதோ அவர் பாசுரம்:

முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்.
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட் டிருத்தவா காணீரே! ஒண்ணுதவீர் வந்து காணீரே!