பக்கம்:உணர்வின் எல்லை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

உணர்வின் எல்லை

சொக்கலிங்கம் முகத்தைச் சுளித்துக்கொண்டே, ‘ஏனப்பா இந்த நடிப்பெல்லாம்? நீயென்ன பழைய சுந்தரமாகவா இருக்கின்றாய்? எப்போது நீ இந்த அரசியல் கட்சிகளோடு ஈடுபட ஆரம்பித்தாயோ, அப்போதே கெட்டுவிட்டாயே! உன் பேச்செல்லாம் உதட்டளவிலேதான்!’ என்றான். எனக்குத் துக்கம் வந்தது, அழுதுவிடலாம் போல இருந்தது. சொக்கலிங்கம் என் மன நிலையைப் புரிந்துகொண்டான். ‘அனிச்சப்பூ’ என்று அவன் என்னை அடிக்கடி சொல்லுவது வழக்கம். அப்படிப்பட்டவன் என் கண் கலங்கப் பொறுப்பானா! ‘என்ன சுந்தரம், நான் விளையாட்டாகத்தானே சொன்னேன்? வருத்தமில்லையே?’ என்று கொஞ்சும் குரலில் பேச ஆரம்பித்தான். இனிமையான தமிழ்ச் சொற்களுக்கு இருக்கும் ஆற்றல் தான் என்னே! என் வருத்தமெல்லாம் பஞ்சாய்ப் பறந்தோடிவிட்டது. மகிழ்ச்சி நிறைந்த கண்களோடு என் பழைய நண்பனிடம் உளங்கலந்து பேசத் தலைப்பட்டேன். ஆனால், அவனோ, நான் வேறு எதைப்பற்றிப் பேசுவதையும் சிறிதும் விரும்பியதாகத் தெரியவில்லை.

***

அதெல்லாம் கிடக்கட்டும்—உண்மையை ஒளிக்காமல் சொல்லி விடு; நான் வரும்போது ஏதோ படிப்பதுபோலப் பாசாங்கு செய்து கொண்டிருந்தாயே; அப்போது யாரை நினைத்து எதற்காகச் சிரித்துக்கொண்டிருந்தாய்? உண்மையைச் சொல்லிவிடு,!