பக்கம்:உத்தரகாண்டம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98   ✲   உத்தரகாண்டம்

வேணாம். அவர்கள் அமைதி வழியில் செல்லாததற்கு நாமே காரணம்னு உறுதிபடுத்தக் கூடாது. குழந்தை தீயின் பக்கம் உட்கார்ந்து குச்சி கொளுத்துகிறது. அம்மா அதை வாங்கித் திருப்பிச் சூடுபோடுவாளா? விடுங்கள். நாம்தான் இப்ப பாடம் கற்றுக் கொள்ள வேணும். எப்படி இந்த எழுச்சியைச் சமாளிக்கலாம்னு பார்க்கணும்...”

“இது எழுச்சி இல்லை ஐயா. இது ஓர் அரசியல் கட்சியின் சூழ்ச்சி. பிள்ளைகளைத் துருப்புச் சீட்டாக்குகிறார்கள்.”

“இருக்கட்டும். எப்படியும் வன்முறைக்கு வன்முறை தீர்வு அல்ல...”

கூட்டம் கலைந்து போயிற்று. அந்தப் போலீசு அதிகாரி இப்போது ஒய்வு பெற்றிருப்பார். எங்கிருக்கிறாரோ, என்னமோ?

அந்த இரத்தக்கரை படிந்த வேட்டி, கிழிந்த சட்டை எல்லாவற்றையும் அவள்தான் சோப்புப் போட்டுத் துவைத்து உலர்த்தினாள்.

அய்யா அன்று முழுதும் பச்சைத் தண்ணீர் அருந்தவில்லை. “யாரும் என்னை வந்து பார்க்க வேண்டாம் என்று சொல்லம்மா...” அலுவலக அறையில் தொலைபேசியின் பக்கம் சுப்பய்யாதான் உட்கார்ந்திருந்தான்.

எதிரே, காந்தி படம், கஸ்தூரிபா அம்மையின் படம்... பக்கச் சுவர்களில் அப்போதைய தேசத்தலைவர்களின் படங்கள். ஸீரியல் பல்ப் எரிய இணைப்புக் கொடுக்கவில்லை.

கண்களில் நீர்வழிய விம்மினார். அப்படி அவர் துயரத்தை வெளிப்படுத்தி அவர்கள் கண்டதில்லை.

“அப்பா, வெறுமே பட்டினி இருக்கக் கூடாது. கொஞ்சம் கஞ்சி குடியுங்கள்...”

“வேண்டாம்மா...’என்று சைகை காட்டினார்.

“ராதா, நீ வேணா, தம்புரா வச்சிட்டு ஹரிதுமஹரோ பாடு!” என்றார் அம்மா. அவள் தம்புரை எடுத்து வந்து உட்கார்ந்ததும் விக்ரம் ஓடி வந்து விட்டது. “நானும்... நானும்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/100&oldid=1049622" இலிருந்து மீள்விக்கப்பட்டது