பக்கம்:உத்தரகாண்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12   ✲   உத்தரகாண்டம்


கூச்சத்தில் குறுக இறங்கி நிலை பெறுகிறாள்.

“ஒ... இவனா?...” வெறுப்பு முகத்தைச் சுளிக்க மேலிடுகிறது.

‘என்னை ஏதற்கடா தொட்டுத் தாங்கினாய்? உன்னைப் பத்துமாதம் இந்த வயிற்றில் வைத்துக் கொண்டு, பால் கொடுத்து, பாசம் காட்டி வளர்த்ததற்காக அணு அணு வாய்ச் சிதைந்து கொண்டிருக்கிறேன்...’ என்று மனம் குமைகிறது.

“வாங்கையா? வாங்க?” என்று கொல்லைப்புறம் இருந்து வரும் ரங்கசாமி, மேலே சுழலும் விசிறிக்கான விசையைப் போடுகிறான். கூடத்தில் நாற்காலி ஏதுமில்ல. அகலமான பெஞ்சு ஒன்றுதான் இருக்கிறது. அய்யா கடைசி நாட்களில் அதில் தான் படுத்திருந்தார். அந்தக் கூடத்தில் உத்தரக்கட்டைக் கொக்கிகளில் தொங்கிய தேக்குமர ஊஞ்சல் அது. ராதாம்மா உட்கார்ந்து ஆடுவாள். தேனாம்பேட்டை வீடும் சுற்றுப்புறங்களும் “சேவாகுருகுலம்” என்றான பிறகு, அந்த ஊஞ்சல் இங்கு வந்தது. இந்த விடும், சுற்று வட்டம் மனைகளும் அம்மாவின் பிறந்த வீட்டு வழியில் வந்தவை.

“உக்காருங்கையா? விசிறில காத்தே வரல...”

அவள் துடை துணியை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் வந்து, அடுப்பைப் பார்ப்பது போல பாவனை செய்கிறாள்.

ராகிக்கூழோ, ஒர் அரிசிப் பொங்கலோ தான் இவள் சமையல்.

ஏதேனும் காய், கீரை-மோர்.

ரங்கசாமி சமையற்கட்டின் வாயிற்படியில் நிற்கிறான். “எதுனாலும் வாங்கிட்டு வரட்டுமாம்மா?”

“என்ன வாங்கணும்? பச்சக் கொத்துமல்லி துவையல் அரச்சிக்கிறேன். எனக்கு ஒண்ணும் வாங்கித் தரவேணாம்!” நறுக்கென்ற துண்டிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/14&oldid=1049379" இலிருந்து மீள்விக்கப்பட்டது