பக்கம்:உத்தரகாண்டம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    165


அவன் காபியை உதட்டில் வைத்துப் பருகிவிட்டுப் போனான். குளியலறையில் சோப்பு மணம் வந்தது. இவள் பூசையறையில் குத்து விளக்குகளை ஏற்றி வைத்தாள். சாமி படங்களுக்குப் பூச்சாத்தினாள். ஊதுபத்திகளைக் கொளுத்தி வைத்தாள். அறையின் கதவு மறைவில் நீராடிப் பூச்சூடி, பொட்டிட்டு மங்கலகோலத்துடன் மரகதம் இருந்தாள். அவள் கையில் மஞ்சட் கிழங்குடன் கூடிய புதிய தாலிக் கயிறு இருந்தது.

“உள்ளே போயி, நல்லபடியா வமுசம் தழைக்கணும்னு வேண்டிக்கிட்டுக் கும்பிடு... முருகன் வள்ளி தேவயான கூட இருக்குற படந்தா...”

“நீ... வுடமாட்டே...?” என்று உள்ளே சென்றதும் அவள் அந்தக் குறுகலான வாயிலில் நின்று கொண்டாள்.

“டேய், அந்தத் தாலிய வாங்கி அவ கழுத்துல கட்டு?” என்றாள் உரத்த குரலில்.

குத்துப்பட்ட உணர்வை விழுங்க முடியவில்லை “யே கெளவி, இதெல்லாம் என்ன நாடகம்!”

“நா நாடகம் ஆடலடா! வீணாப் பொண்பாவம் தேடிக்காத! இவவயித்துப் புள்ளதா மொத வாரிசு! சும்மா பேசாம, தாலிய வாங்கிக் கட்டு?”

தாலியைக் கட்டினான்.

“ரகசியமா நீ குடுத்திட்டா, அது அப்பன் பேர் தெரியாம போகும்டா! ஒத்துக்கோ!...”

பேச வழியில்லை. குங்குமத்தைக் கொடுத்து வைக்கச் சொன்னாள் மரகதம். சரேலென்று அவன் வெளியேறு முன், மரகதம் அவள் காலில் விழுந்து பணிந்தாள். கண்ணீருடன் அவளைக் கட்டிக் கொண்டாள். “ஆயிசுபூர நீங்க செய்த இந்த உதவிக்கு, நான் உங்களுக்குச் செருப்பா உழைக்கணும்...” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/167&oldid=1050016" இலிருந்து மீள்விக்கப்பட்டது