பக்கம்:உத்தரகாண்டம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174   ✲   உத்தரகாண்டம்


“அநாவசியமா ஒரு பெண் பாவத்தை... இல்லை ஏழைத் தாயின் சாபம் வேண்டாம். அந்த விபத்தை நானே கண்ணால் பார்த்தேன். அந்தப் பையன் மீதுள்ள வழக்கை இல்லாமலாக்கி விடுங்கள்.”

குழந்தைவேலு, அவளை மின் வண்டியில் ஏற்றிக் கூட்டிச் செல்கிறான். சைதாப்பேட்டையில் இறங்கி, ஓர் ஆட்டோவைப் பிடித்து அவளை ஏற்றிச் செல்கிறான். அவள் போகும் இடங்கள் எதுவுமே அவளுக்குப் பரிசயமாகத் தெரியவில்லை. பெரிய கட்டிடங்கள். அடுக்கு மாடிகள். பெரிய சாலையிலிருந்து திரும்பி, வழியில் முன்பே போலீசு... காவல் அறையில் துப்பாக்கியுடன் காவலர்கள். யார்யாரோ வெள்ளையும் சள்ளையுமாக. ஆட்டோவை அங்கேயே நிறுத்தி விடுகிறார்கள். சிறிய ஷெட்போல் ஒரு இடத்தில் கரைவேட்டிப் பையன் இவர்களை நோக்கி விசாரிக்கிறான்... “யாரோன்னு நெனச்சுக்காத தம்பி. அம்மா...” அவனைச் சற்றே விலகி அழைத்துச் சென்று காதில் கிசுகிசுக்கிறான்.

பெரிய கோட்டைக் கதவுகளை அவன் திறந்து அவர்களை மட்டும் விடுகிறான். உள்ளே எவ்வளவு பெரிய இடம்?

முன் வாயிலில் உள்ளேயும் காவல்.

அலுவலக அறை. குழந்தைவேலு உள்ளே சென்று தகவலைச் சொல்கிறான். அப்போதுதான் அவளுக்கு வெறுங்கையாய் வருகிறோமே என்று உறுத்துகிறது. மரகதத்துக்கு முதலில் இரண்டு பிள்ளைகள். அடுத்து இரண்டும் பெண்கள். எல்லாருக்கும் அநேகமாகக் கல்யாணமாகிவிட்டது. திருமணம் என்றால், முன்பு வந்து அவர்கள் அழைப்பு வைத்தார்கள். அப்போது அய்யா இருந்தார்கள். மஞ்சு கல்யாணத்துக்குச் சென்றாள். மிகப் பெரிய ஆடம்பரத்துடன் நடந்தது. அங்கே அவளுக்குத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவோ அறிமுகம் செய்து கொள்ளவோ கூட இடமில்லை. ரஞ்சிதம் மட்டுமே, ‘வாங்கத்தே’ என்று ஒரு வாய்ப் பேச்சு உபசரணை செய்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/176&oldid=1050036" இலிருந்து மீள்விக்கப்பட்டது