பக்கம்:உத்தரகாண்டம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    177


இதற்குள் மரகதமே அங்கு வந்து விடுகிறாள்.

மரகதம்... மினுமினுப்புச் சேலையும் கை கொள்ளா வளையல்களுமாக அவளைப் பார்த்து, “எங்க இம்புட்டுத் துரம்?” என்று குத்துகிறாள்.

“மரகதம், நல்லாயிருக்கியாம்மா?...”

“ஏதோ ஒம் புண்ணியத்துல நல்லாருக்கோம்.”

அவள் அருகில் சென்று மரகதத்தின் கைகளைப் பற்றிக் கொள்கிறாள்.

“மரகதம், அநாவசியமா, ஒரு பொண்பாவத்த, ஏழைத் தாயின் சாபத்துக்கு ஆளாக வேணாம். நீங்கல்லாம் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கணும். அந்த விபத்தை நானே கண்ணால பாத்தேன். நான் வாரப்ப, அந்த ரோடிலதா நடந்தது. ஏழை பாழை, பிரியாணிக்கு ஆசப்பட்டுக் கூட்டத்துக்குப் போயிருக்கா. அந்தப் பையன்தான் பொண்ணு கையப்புடிச்சி இழுத்து சக்கரத்துக்கு அடில வுட்டான்னு, கொலை வழக்குப் போட்டிருக்காம். நாகமணிதா...”

“ஏ, கெளவி!” என்று அவள் குரல் அரிவாள் வெட்டாகப் பாய்கிறது.

“நீ கண்ணால பாத்தியா? ஏ இப்பிடிப் பொய் சொல்லுற? உனக்கு அதுதான் தொழிலு! பெத்த மகனுக்கு எதிராக் கட்சி கட்டுற சன்மம்! ஆடு நனையிதேன்னு ஓநாய் அழுதிச்சாம்! எதிர்க்கட்சிங்க, வேணுமின்னே கத்தியக் கையில வச்சிட்டுத் திரியுதுங்க. நாகு அண்ணக்கு ஊருலியே இல்ல. எதிராளிக கிட்டப் பணத்த வாங்கிட்டு, ஒண்ணுமே அறியாத புள்ளய வம்புல மாட்டி உட்டிருக்கா, அந்தப் பரதேசிக் கும்பல். இது சூதுவாது அறியாத புள்ள. போஸ்டர், பானர்னு இவங்கிட்டப் பணம் வாங்கிட்டு, அடுத்தவனுக்குச் சாதகமாக பிரசாரம் பண்ணுனா. நீ இப்ப அந்தப் பயலுகளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வரியா? எந்த மூஞ்சிய வச்சிட்டு இங்க வந்த?...”

உ.க.-12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/179&oldid=1050045" இலிருந்து மீள்விக்கப்பட்டது