பக்கம்:உத்தரகாண்டம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178   ✲   உத்தரகாண்டம்


இவளுக்கு இந்த அடிகள் பழக்கமில்லாதவை. ஈனச் சாதியில் பிறந்தாலும், அன்பின் அரவணைப்பும் பரிவின் குரல்களுமே அவளுக்கு நியாயங்களைப் பதிய வைத்திருக்கின்றன. அநியாயங்களுக்கு அவள் தலை வணங்கியதில்லை. ஆனால், ஒதுங்கியே பழக்கமானவள். நேராக நின்று இழிவம்புகளைத் தாங்குகிறாள்.

“இதபாரு மரகதம், என்ன நீ என்ன வேணாய் பேசிட்டுப்போ! அதனால எனக்கு ஒண்ணும் இல்ல. ஆனா, நீ ஒரு பொம்புள. நாலு மக்களப் பெத்தவ. இன்னிக்குக் கண்ணியமான ஒரு இடத்துல நீ இருக்கேன்னா, இது எப்பிடி வந்ததுன்னு ஒரு நிமிசம் நெனச்சிப்பாரு. நம்ம புள்ளங்களுக்கு நாமதான் நல்ல வழி காட்டணும். மறுபடி சொல்ற ரோட்டுல அன்னாடம் வண்டி கவுந்து மோதி சாவு நேருது. அதெல்லாம் விதின்னு தான் போறாங்க ஆனா...”

“இதபாரு கெளவி! ஆனா ஆவன்னா கேக்க நா வரல. மரியாதையா எடத்தக் காலி பண்ணு! போ!” என்று வெட்டுகிறாள், வெரட்டுகிறாள்.

அன்று கல்யாண மண்டப வாயிலில் போலீசுக்காரன், அவள் தாம்பூலப்பையைத் திறந்து காட்டச் சொன்னானே, அப்போது நெஞ்சில் தைத்த ஊசி அவளுக்கு வேதனையே அளிக்கவில்லை. இந்த வேதனையை விழுங்கிக் கொள்ள இயலவில்லை. சந்திரி வந்திருப்பதாகக் குழந்தை வேலு சொன்னதெல்லாம் அந்த வேதனை எரிச்சலில் நினைவுக்கு வரவில்லை.

அவள் வெளியேறியதைக் கவனித்து விட்டு குழந்தைவேலு வாயில் அறையிலிருந்து ஓடிவருகிறான்...

“அதுக்குள்ள வந்திட்டீங்க...?”

அவள் பதிலேதும் கூறாமல் விடுவிடென்று நடக்கிறாள். குழந்தைவேலு, கிடுகிடென்று உள்ளே ஓடி, “வரேன்... வரேன் தலவரய்யா கிட்ட மறக்காம ஒரு பேச்சுப் போடுங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/180&oldid=1050047" இலிருந்து மீள்விக்கப்பட்டது