பக்கம்:உத்தரகாண்டம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180   ✲   உத்தரகாண்டம்


“நாங்கள் எல்லாருமே, கிராமங்களை விட்டு, வியாபாரம் படிப்புன்னு, இடம் பெயர்ந்தவங்கதான்” என்று அய்யா சொன்ன குரல் ஒலிக்கிறது. ஆனால் இப்படிப் பிழைக்க வழியில்லாமலா வந்தார்கள்? இப்படிக் குஞ்சும் குழந்தையுமாகவா வந்தார்கள்?

சைக்கிளில், சுருக்கு வளையக்கம்பி, கயிற்றுடன் இரண்டு பேர் அங்கே போகிறார்கள்.

சற்றைக்கெல்லாம் பன்றியின் மூர்க்கமான பிளிறல் அந்தப் பக்கம் மெங்கும் எதிரொலிக்கிறது.

தாயம்மாளுக்கு வயிற்றை சங்கடம் செய்கிறது.

“கிறிஸ்துமஸ் வருதில்ல?..” என்று சொல்லிக் கொண்டு ரங்கசாமி பீடிக்காரலை உமிழ்கிறான்.

“கிழக்கால பெரிய ஜபக்கூடம் கட்டுறாங்க.”

“புதிசில்ல. அது கூரைக் கொட்டாயா இருந்திச்சி; அத்தப் பெரிசா கட்டுறாங்க. வெளிநாட்டுலேந்து பணம் கொட்டுதையா...” இவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இரண்டு கார்கள் வந்து நிற்கின்றன. முதலில் வந்து நிற்கும் காரின் கதவைத் திறந்து கெண்டு ஒரு பெண் இறங்குகிறாள். நல்ல வெளுப்பாக, உயரமாக, கிராப்தலையும், நீண்ட தொங்கட்டானும், மூக்குக்கண்ணாடியுமாக இருக்கிறாள். சல்வார் கமிஸ், பாதம் தூக்கிய செருப்பு... பின்னால் பருமனாக... ஓ, சந்திரி... கரையில்லாத இளநீலப் பட்டுச் சேலை, கரேலென்று சாயம் போட்டமுடி... அச்சாக அப்பனே போல், ஒரு பையன் கருப்புக் கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு, அந்த வீட்டை மேலும் கீழுமாகப் பார்க்கிறான். இவன் ரஞ்சிதத்தின் பையனா? ரங்கன் பரபரவென்று வந்து கதவை நன்றாகத் திறந்து “வாங்க... வாங்கம்மா, வாங்க...! முன்னியே ஒரு போன் போட்டு சொல்லிருக்கலாமில்ல?” என்று மாடிக்கு ஏறிச் செல்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/182&oldid=1050051" இலிருந்து மீள்விக்கப்பட்டது