பக்கம்:உத்தரகாண்டம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22   ✲   உத்தரகாண்டம்

அவள் நிலையான தென்று நம்பினாளோ, அது ஆட்டம் கண்டுவிட்டது. பஞ்சமி பள்ளிப் படிப்பு முடித்து, கிராம சேவிகா பயிற்சியும் முடித்து, காஞ்சிபுரம் பக்கம் சேவிகாவாக வேலை பார்க்கையில் கல்யாணமாயிற்று. கிராமத்துப் பையன்தான். ‘எலக்ட்ரிகல்’ வேலை தெரிந்து தொழில் செய்தான். படப்பைப் பக்கம் குடும்பம் வைத்திருந்தார்கள். சந்திரி பள்ளி முடித்து ‘நர்ஸ்’ படிப்புக்குச் சேர்ந்திருந்தாள்.

“அம்மா, தம்பி பேரை மாத்திக்கிடிச்சி!...”

பஞ்சமியும் மருமகனும் தீபாவளிக்கு வருவார்கள் என்று, பலகாரம் சுட மாவரைத்து வந்திருந்தாள் அவள்.

“என்னடீ சொல்ற?”

“ஆமா... இத பாரு, நோட்டுப் புத்தகத்திலெல்லாம் எழுதிட்டிருக்கு!” அவள் துணுக்குற்றுப் பார்த்தாள்.

இளவழகன்... இளவழுதி, இளவரசன்...

“ஸ்கூல்ல பேர் மாத்திட்டானா?”

“தெரியல. ஆனா, அவன் மோகன்தாஸ் காந்தியில்ல. அது மாத்திரம் நிசம்...”

அப்போதே அவள் மருண்டு நின்றாள். ஆதாரக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட, குருகுலம் பள்ளியில் அவன் படிக்க விரும்பவில்லை. இவர்கள் குடிசை, அந்த வளாகத்தில் தான் இருந்தது. பள்ளி வகுப்புகள் ஏறி ஒன்பது, பத்து என்று வந்துவிட்டது. அங்கேயே சாப்பிட்டுத் தங்கிப் படிக்க, முப்பது பிள்ளைகள் போல இருந்தார்கள். மரத்தடியில் பராங்குசம், மருதமுத்து, சுசீலாதேவி எல்லாரும் வகுப்பெடுப்பார்கள். ஆங்கிலம் தமிழ் இந்தி எல்லாப் பாடங்களும் உண்டு. சுதந்தர இந்தியாவின் குடிமக்களை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெரிய தலைவர்கள் அங்கே வருவார்கள். அம்பர் சர்க்காவில் நூல் நூற்று, ஏழைப் பெண்களுக்குத் தொழில் புரிய வசதி செய்திருந்தார். ராதா அம்மாவுக்கு எளிய முறையில் அங்குதான் கல்யாணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/24&oldid=1049401" இலிருந்து மீள்விக்கப்பட்டது