பக்கம்:உத்தரகாண்டம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    259

போல் இருக்கும். சிறுபிள்ளைகளில் தும்பியைப் பிடித்து சிறகடித்துத் துடிப்பதைப் பார்க்க, பசுங்கன்றின் உடலில் சிறு கல்லை வீசி அதன் உடலில் சிலிர்ப்பலைகள் பரவுவதைப் பார்க்க என்று துன்பம் செய்வார்கள். நானோ...

“தாயம்மா, உங்களுக்குத் தெரியுமோ, என்னேமா? உயர் குலத்துக்கும் ஒரு மனிதரின் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லை என்று சிறுவயதிலேயே நான் அறிஞ்சுகிட்டேன். என் அம்மா எனக்கு அஞ்சு வயசாக இருக்கும் போதே ‘பிலட்கான்சர்’ வந்து போயிட்டா. என் சித்தியையே அப்பா கல்யாணம் பண்ணிக் கொண்டார். சித்திக்குத்தான் இரண்டு பிள்ளைகள். என் அப்பாவின் தம்பிதான் அந்தக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்து, சாமியாராகப் போனவர். என் அம்மா மேல் அவருக்கு ரொம்பப் பிரியம். நான் குழந்தையாக இருந்த போது அடிக்கடி வருவார். அவரைக் கண்டால் சித்திக்கும் பிடிக்காது, அப்பாவுக்கும் பிடிக்காது. அப்பாவுக்கு டெல்லி, மேல் தட்டு சமூக-பார்ட்டி, ஆடம்பரம் எல்லாம் பிடிக்கும். அம்மாவுக்கு அந்த வாழ்க்கையில் பிடிப்புக்கிடையாது என்று சித்தப்பா சொல்வார். ஆனால் ரொம்ப நாள் இருக்கல. அப்பா அம்மா செத்துப் போகு முன்பே சித்தியை வீட்டில் கொண்டு வைத்துக் கொண்டிருந்தாராம். எனக்கும் நினைவு இருக்கு. அப்பா குடித்து விட்டு வருவார்... சின்ன வயசிலேயே எனக்கு அந்த சமாசாரம் மனசில் பதிஞ்சுடுத்து. என் வாழ்க்கை பின்னால் இடிஞ்சு போனதுக்கே அதுதான் காரணம்... தாயம்மா...!”

முகத்தை மூடிக் கொண்டு அவள் விம்முகிறாள்.

“அவுரு குடிக்கிறாரு பாட்டில் இருக்கு...”

“அந்த பாட்டில்ல இஞ்சி பூண்டு மிளகு சீரகம் தட்டிப் போட்ட ரசம் குடுப்பேன்...”

பனிப்புகையாய் காட்சிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/261&oldid=1050290" இலிருந்து மீள்விக்கப்பட்டது