பக்கம்:உத்தரகாண்டம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    277

சுமாராக வகிடு பிளந்து... முடிந்து கொள்வாள். ஒரு ஊசி செருக வேண்டும்... இப்போது முடி கூழையாகிவிட்டது. என்றாலும், இறுக முடிவதுபோல் செருகிக் கொள்வாள்...

உக்காருங்க...

“அடிம்மா... இதுல...”

உயர கால் தொங்கப்போட்டு உட்காரும் கழிப்புக்கலம்.

“கீழ வழுவழுன்னு இருக்கு, பத்திரம், உக்காந்துக்குங்க...” அவள் உட்கார்ந்து கொள்கிறாள். பல்விளக்க ஒரு பற்பசை தருகிறாள். நிற்க முடியவில்லை. அப்படியே விரலால் துலக்கிக் கொள்கிறாள். பல் பொடியோ, வேப்பங்குச்சியோ வைத்துத் துலக்கித்தான் பழக்கம். கடையில் ஏதேதோ பற்பொடிகள், கொடுக்கிறான். அவள் பற்களுக்கு ஒரு கேடும் இல்லை. அநுவுக்கு எப்படிப் பற்கள் தேய்ந்தும் விழுந்தும் முகத்தையே மாற்றிவிட்டன?

கன்னியம்மா, அவள் முகத்தைத் தேங்காய்ப் பூத்து வாலையால் துடைத்து, படுக்கைக்குக் கூட்டி வருகிறாள்.

பக்குவமாக பருப்பும் சோறும் ரசமுமாகப் பிசைந்து, முன்னே ஸ்டூலில் வைக்கிறாள்.

அழுக்குக் குளத்தில் தாமரைகளா?...

வயது முதிர்ந்து, உடலும் உள்ளமும் நலிந்த காலத்தில், இந்தப் பரிவும் பேணுதலும் எத்துணை ஆறுதல் அளிக்கிறது?

“கொஞ்சம் தயிரூத்தி சோறு பிசையட்டுமா பெரிம்மா? இஞ்சி ஊறு காய் இருக்கு.”

“வாணாந்தாயி, எனக்குத் தாயா நிக்கிறீங்க. போதும்மா. வழக்கத்தைவுட நெறய சாப்புட்டேன். நீ போட்ட கையி...” என்று அந்தக் கையைக் கண்களில் வைத்துக் கொள்கிறாள். கையில் ஈரம் படிகிறது. சம்பு அம்மா, நீங்க இந்த ரூபத்துல வந்திருக்கீங்களா? என்னிய இந்தக் கண்ணம்மாளக் கரையேத்த கன்னியம்மா ரூபத்துல வந்திருக்கீங்களா? அம்மா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/279&oldid=1050359" இலிருந்து மீள்விக்கப்பட்டது