பக்கம்:உத்தரகாண்டம்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280   ✲   உத்தரகாண்டம்


இதுவரையிலும் மரகதம், மஞ்சு, சந்திரி யாருமே இங்கே வரவில்லை. பெரிய அரண்மனைகளில் இப்படித்தான் நடக்குமோ? சிந்தாமணி பங்களா என்பது மூத்தவளின் வாசஸ்தலமோ?

அவள் வாழ்ந்த உலகுக்கும் இந்த நடப்பியல் உலகுக்கும் எத்தனை வித்தியாசம்?

அவள் மகனுக்கு எத்தனை மகன்கள், எத்தனை மகள்கள்?

அந்த ஒட்டு மீசை சாப்பாடு கொண்டு வருகிறான்.

பெரிய தட்டில் சாப்பாடு வைத்து மேலே இன்னொரு தட்டால் மூடிக் கொண்டு வருகிறான். கட்டிலுக்கருகில் ஸ்டூலில் வைக்கிறான். தண்ணீரையும் கிளாசில் ஊற்றி வைக்கிறான்.

தட்டைத் திறந்து விட்டு, “பெர்சு, குர்மா பொரியல், அல்லாம் ஸ்பெசல் இன்னிக்கு. உனக்குன்னு கொண்டாந்திருக்கிறேன்... சாப்பிடு... வர்ட்டா ?” என்று போகிறான்.

மசால் நெடி மூக்கைத் துளைக்கிறது.

சிறு கிண்ணங்களில் குழம்போ, குர்மாவோ ஏதோ வைத்திருக்கிறான். பருப்பும் ரசமும் போட்டுப் பாங்காகப் பிசைந்து கொடுத்த அந்தச் சோறு இல்லை இது...

சோற்றைத் தொடவே கை கூசுகிறது. கீழே அவன் வைத்த தட்டை எடுத்து மூடிவிட்டுப் படுக்கிறாள்.

உண்ணாவிரதம் என்று அவள் அறிந்து இருந்ததில்லை. ஆனால் எத்தனையோ சந்தர்ப்பங்களில், வயிற்றுக் குணவு கொள்ளத் தோன்றியதில்லை. நேரம் இருந்ததில்லை. பசி தெரிந்ததில்லை. அவள் கால்களும் கைகளும் நன்றாக இயங்க, சுதந்தரமாக இருந்த நாட்களில் பசித்து, பட்டினி கிடந்ததில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/282&oldid=1050362" இலிருந்து மீள்விக்கப்பட்டது