பக்கம்:உத்தரகாண்டம்.pdf/320

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
318   ✲   உத்தரகாண்டம்
 

நிலையில் இருக்கிறான். கிடைத்த துணியைச் சுத்தி இருக்கிறார்கள். கன்னியம்மா, முற்றத்தில் அடுப்பெரிய விட்டு, ஒரு மண் சட்டியில் எங்கிருந்தோ நீர் கொண்டு வந்து சூடு செய்கிறாள். பிறகு, கந்தல் துணிகளை நனைத்து ரத்தக்காயங்களை, அந்தப் பெண் பிள்ளை முகத்தைத் துடைக்கிறாள்.

அவன் ஒன்றும் பேசாமல், அடுத்த வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறான். அங்கு ஒரு நிறை கருப்பிணி கண் விழிக்காமல் கிடக்கிறாள். ஒரு இளைஞன் கண் விழித்தாலும், பசி, பசி, வலி வலி என்று சாடை காட்ட முடியாமல் முனகுகிறான். கைகள் இரண்டும் கட்டுப் போட்டிருக்கிறான். இரத்த வீச்சம் கப்பென்று மூச்சைப் பிடிக்கிறது. அங்கே ஒரு பெண், நர்சம்மா போல், இரட்டைப் பின்னல் போட்டுக் கட்டிக் கொண்டிருக்கிறாள். இட்டிலியை ஒரு இலையில் வைத்துப் பிய்த்துக் கொடுக்கிறாள்.

“டெட்டால் வாங்கி வரச் சொன்னனே, வரல?...”

“போட்டேன் சார். நாத்தம் இங்கல்ல. வேற பக்கம், பின்னாலேந்து வருது. கோயில் கிணத்திலேந்து தண்ணி கொண்டாந்தார் கான்ஸ்டபிள்.”

“ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வண்டி இல்ல. இத இப்ப வரும், அப்ப வரும்ங்கறாங்க... அடிபட்டுக் கிடக்கிற வங்க என்ன சாதி, என்ன ஊரு?...”

“இந்தம்மாதான கவலையாயிருக்குது. குழந்தையின் துடிப்பு வயத்தில் கேக்கல. அதிர்ச்சியா இருக்கிறாங்க. அட்வான்ஸ்ட் ஸ்டேஜ்” அவர் தலையைக் குனிந்து கொண்டு வெளிவருகிறார்.

“உங்க பேத்திய சமயத்தில் கூட்டி வந்தீங்க. நாங்க கலவரத்த அடக்கத்தான் வந்தோம். ஆனா, இந்தப் பாவங்களை எப்பிடி வுட? காக்கிச்சட்டைக்குள்ளயும் மனசு இருக்கு. காக்கி போடாட்டியும் வெறி இருக்கு. சொந்த பந்தம் ஏது என்னன்னு பாராம ஓடுறவங்க ஓடிட்டாங்க.