பக்கம்:உத்தரகாண்டம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    71

சம்சாரம் இல்லேங்கறது. நிச்சியமா?”ன்னு கேக்குறான் அந்தத் தாசில்தார்.

“இல்லீங்கையா... நிசமாலும் இல்ல..."ன்னு நடுங்கிக் கிட்டே அவுங்க சொல்றாங்க.

“ஏம்மா, உங்களுக்கோ புள்ள இல்ல. அப்ப அவருவேறு ஒரு கலியாணம் செய்து கொண்டிருக்க மாட்டாருன்னு எப்பிடி நம்புறது? நாளைக்கு அவுங்க வேற, ‘பென்சன் ‘க்ளைம்’ பண்ண வந்தா எங்களுக்குப் பிரச்னையாயிடுமே? ஆமா... உங்களுக்குத்தான் ஒண்ணுமில்ல. நீங்களே உங்க புருசருக்கு இன்னொரு கலியாணம் பண்ணி வச்சிருக்க வேண்டிதுதான?"ன்னு கேட்டாம் பாரு, அப்பவே எனக்கு அந்தச் சண்டாளன அடிச்சி நொறுக்கணும் போல இருந்திருச்சி, “ஏ, கோவாலு? இங்க வா!"ன்னு கத்தினே. எனக்கு இங்க ஒரு சர்ட்டிபிகேட்டும் எழவும் வாணாம்” ன்னிட்டு வெளிய வந்தேன்.

“ஏன் பெரிம்மா? அவங்கிட்ட நூறு ரூபாயும், ஃபார்மும் குடுத்தாச்சி. அஞ்சே நிமிசத்துல வந்திடும்...” ன்னா. அதுக்குள்ள அம்மாக்குப் பொறுக்கல... அந்தப் பொறுக்கி, எம் மகள இதுபோல எதானும் கேக்கமாட்டான்னு என்ன நிச்சயம்? படுபாவிக...

“சாதிச் சான்றிதழ் பெற ஒரு இருளப் பொம்புள வந்து நிக்கிது. அஞ்சுநூறு குடுத்திருக்காம். பாம்பு கொண்டாறேன், புடிச்சிக் காட்டுறியான்னு கேட்கிறானாம் தடியன்...” என்று தாசில்தார் அலுவலகக் காட்சிகளை விரிக்கிறாள்.

“சரிம்மா, உள்ள வாங்க. கஞ்சியும் சோறுமா ஏதோ ஆக்கி வச்சிருக்கிறேன்...” என்று அவர்களைச் சமையல் அறைக்குள் அழைத்துச் செல்கிறாள்.

6

காலையில் சாணிகரைத்து வாசலைத் தெளித்துப் பெருக்கிக் கொண்டிருக்கையில், விடாதே, பிடிபிடி... என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/73&oldid=1049526" இலிருந்து மீள்விக்கப்பட்டது