பக்கம்:உத்தரகாண்டம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்   ✲    89

சதைபிடிக்க, வெள்ளையும் கருப்புமாகத் தாடியும், தங்க பிரேம் கண்ணாடியுமாகக் காட்சி அளித்தான். முடி மட்டும் கரேலென்று பிடரியில் தொங்கியது. ஒரு பழுப்பு நிற கதர் ஜிப்பா போட்டிருந்தான். அதன்மேல் ஒரு உருத்திராட்ச மாலை தெரிந்தது. ஆட்களைக் கூட்டி வந்து பக்கத்துக்குடில், தோட்டமெல்லாம் சுத்தம் செய்யப் பணித்தான். தலைமறையச் சற்றுச்சுவர் எழும்பியது. உள்ளே ஒரு கொட்டகை போட்டார்கள். பெரிய சாலையில், ‘ஹார்ட்வேர்’ கடை வைத்திருந்தவர்களுக்கு அது கிடங்கறையாக இருந்தது. ஏதோ தகராறு வந்து, அதுவும் காலியாகிவிட்டது. வெளிப் பூட்டுத் துருப்பிடித்து, கதவும் துருப்பிடிக்க, கொடிகளும் புல்புதர்களும் மண்ட, சுவரேறிக் குதித்து சீட்டாடுபவர்களுக்கும், குடிப்பவர்களுக்கும், தப்புக்காரியங்கள் செய்பவர்களுக்கும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வீட்டு எல்லையில் இருக்கும் மாமரம், அந்த உறவை விடவில்லை. கிளைகளைச் சுவருக்கு மேல் பரப்பி, உரிமை கெண்டாடுகிறது. ரங்கன் மரத்தின் மேலேறி, அந்தப் பக்கம் இறங்குகிறான்.

“நாரத்தைமரம் ஒண்ணு பெரி...சா வளந்து காச்சுத் தொங்குது?” என்று பறித்து வருகிறான். அந்தப் பக்கம் ஓர் ஏணியே சாத்தி இருக்கிறான். இவளுக்கு எந்த உரிமையும் இல்லை. ரங்கனை அவள் எதுவுமே கேட்பதில்லை. அவன் எஜமான நிலையில் இருந்து அவளை அதிகாரம் செய்வதில்லை. ஆனால், அந்த வீட்டில் அவள் வாழ்கிறாள். ஒயர்பை பின்னுகிறாள். அவளுக்கென்று ஒரு தொகை வங்கியில் அய்யா கட்டியிருக்கிறார். அதன் வட்டி மாசத்தில் ஆயிரம் ரூபாய் போல் வரும். அவள் தனக்கென்று எந்தச் செலவும் செய்ய வேண்டி இருக்கவில்லை. மெயின் ரோடில் நெருக்கடியான சந்தைப் பகுதியில் மாடியில் வங்கி இருக்கிறது. முன்பு அவளுக்குப் பரிசயமாக இருந்த ஆட்கள் யாருமே இப்போது இல்லை. மாசம் பிறந்தால் பணம் செலவுக்கு எடுத்துக் கொண்டு, கேழ்வரகு, அரிசி, பருப்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/91&oldid=1049610" இலிருந்து மீள்விக்கப்பட்டது