பக்கம்:உத்திராயணம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உத்தராயணம் 3



தட்டிக் கொட்டிப் பரப்பி வைத்திருக்கிறான். வென்னீரடுப்புக்கும் அதை எரிக்கப் போவதில்லை. எனக்குத் தெரியும். முள்ளைக் கையில் குத் திக்கொள்ளாமல் எரிக்கத் தனிப்பொறுமை சிரத்தை, Knack வேண்டும்.

கிணற்றடியில் வாழை இலைகள் காற்றில் நர்த்தனமாடி வரவேற்கின்றன. சத்தியமா (விட்டேன்) அவை என்னை அடையாளம் கண்டுகொண்டுதான் அப்படிச் செய்கின்றன, மாலையில் ஒன்றிரண்டு வாளிகள் நான் இழுத்துக் கொட்டுவதைக் கொண்டு, இலை ஒவ்வொன்றும் ஆள் படுக்கலாம். அல்ல பாவாடை கட்டிக்கலாம். என்ன ஜாதியோ தெரியவில்லை. தாருக்கு இன்னும் எத்தனை நாள் போகணுமோ?

எங்களை இலையைத் தொடக்கூடாதுன்னு பழியா நிக்கறேள். மத்யானம் பாருங்கோ பாளம் பாளமாக் காத்து கிழிச்சுடறதே, என்ன சொல்றேள்?

காற்றுக்கு அலங்கோலமாக அதற்கு இஷ்டம். அதற்காக உன் கத்திக்கிரையாகக் காத்திருக்குமா?

-நான் சொல்லவில்லை, வாய் திறந்து சொல்லிவிட்டால் பந்து என் மேலேயே திரும்பி வந்து மோதும்.

"பிராம்மணனுக்கு வயசுக்கேத்த பேச்சா இருக்கா பாரு!"

கண்ட கனவுக்கேற்ற வயது கடந்து எத்தனையோ வயதாகிவிட்ட போதிலும் வயதுக்கேற்ற கனவு என்று காண வருமோ?

நடுப்பிள்ளையும் அடுத்தவனும் பல் தேய்த்துக்கொண்டிருக்கிறான்கள்.

“இந்த வீட்டில் ஒரு பேஸ்டா, மண்ணா, ஒண்ணு உண்டா? எப்பவும் மாசக் கடைசிதானா?”

“ஏன், மண் இருக்கே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/13&oldid=1154985" இலிருந்து மீள்விக்கப்பட்டது