பக்கம்:உத்திராயணம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மாஸூ


-மா ஸூ, நினைவிருக்கிறதா? நாம் சந்தித்த புதுசு. எனக்கு ராயப்பேட்டையில் ஜாகை. நீங்கள் டவுன். இரவு எட்டுமணி வாக்கில் வருவீர்கள்- நீங்கள், தாத்து, செல்லம், ரங்கநாதன், எல்லோரும் பேசிக்கொண்டே மரீனா வழியே நடந்து, தங்கசாலைத் தெருவில் ஒரு குஜராத்தி பவன்- பூரி, பாஜி, சேறாட்டம் பால்; அதன்மேல் கணிசமாக மிதக்கும் ஏடு. அப்படியே பேசிக்கொண்டே கோவிந்தப்ப நாய்க்கன் தெரு: விளக்கு வெளிச்சத்தில், இரவு பகலாகியிருக்கும். மார்வாரிப் பெண்டிர், வளையல்களும், பாதங்களில் தண்டையும், கொலுசும் குலுங்க, விதவிதமான வர்ணங்களில் மேலாக்குகள் சுழல, தெருவில் கும்மியடிக்கையில்- இது செளகார்பேட்டையா, பிருந்தாவனமா?

-அப்படியே பேசிக்கொண்டே, கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்குக் குறுக்கே வெட்டி, காந்தி- இர்வின் சாலை வழியே பேசிக்கொண்டே மீண்டும் மரீனா பீச், நள்ளிரவில் பட்டை வீறும் நிலா. பேசிக்கொண்டே, பைக்ராப்ட்ஸ் ரோடு, விவேகானந்தர் இல்லம், ஐஸ்ஹவுஸ் ரோடு, பெஸண்ட் ரோடில் என் வீட்டில் என்னை விட்டுவிட்டு, மணி இரண்டாகிவிடும். பிரியாவிடையில் டவுனுக்குத் திரும்புவீர்கள். நம் அத்தனை பேருக்கும் அதென்ன பைத்யக்காரத்தனமோ?

ஞாயிறு, சிந்தாதிரிப்பேட்டையில் 'பீஷ்மன்' வீட்டுக்குச் செல்வோம். அடை டிபன். அதன் விறைப்பான மொற மொறப்பின் மேல் எண்ணெயின் நக்ஷத்திர மினுக்கு. நல்ல உணக்கை; காரம் சற்று கூடத்தான்.

பேசுவோம். பேசுவோமோ, என்னதெல்லாம் பேசுவோம், இலக்கியம், சினிமா, ஆண்டாள், நியூ தியேட்டர்ஸ், ஸெய்கல்,கம்பன், 'துனியா ரங்க ரங்கே’, ஆழ்வாராதிகள், தேவகிபோஸ் தேவதாஸ், வித்யாபதி, பாரதி, ராஜாஜி, நேரு, அத்வைதம்,