பக்கம்:உத்திராயணம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
iv



வசிஷ்டாத்வைதம், ஆவாரா- பேச்சு எங்கெங்கோ தாவி, நம்மை இழுத்துச் செல்லும் தன் வழியில். பலகணிகள் ஏதேதோ திறக்கும். புது வெளிச்சம், புது திருஷ்டிகள். புதுக் கூச்சங்கள். வியப்பாயிருக்கும், ஆனந்தமாயிருக்கும், சில சமயங்களில் -பயமாயிருக்கும்.

ஆதியப்ப நாய்க்கன் தெருவில் ஒரே வீட்டில், பதினெட்டு குடித்தனங்களில், உங்களதும் ஒன்று. “அது ஒரு Community life; நன்றாய்த்தானிருந்தது” என்பீர்கள். உங்களுடைய சுபாவமே அப்படி. ஆயிரம் சோதனைகளுக்கு நடுவில், எனக்குத் தெரிந்து நீங்கள் உங்களை வெறுத்துக்கொண்டோ, பிறரைச் சுளித்தோ ஏதும் சொன்னதில்லை.

மாஸூ நினைவிருக்கிறதா, ஆதியப்ப நாய்க்கன் தெருவில், நீங்கள் இலவசமாக நடத்திய ஹிந்தி வகுப்புக்கள் நடந்த, ஒலைக்கூரை வேய்த மொட்டை மாடியில்தான் ஜனனி -என் முதல் கதைத் தொகுதிக்கு வித்திட்டவர் நீங்கள்தான்.

நானும் முப்பது வருடங்களில் பார்க்கிறேன், உங்களிடம் அசைக்க முடியாத சில திடங்களும் கொள்கைகளும் இருக்கின்றன. உடல் பூஞ்சையானாலும், நீங்கள் பலவான்தான். உங்கள் செயல்படலில் ஓசை கேட்பதில்லை. ஆனால் காரியம் முடிந்தபின், அதைவிடச் செவ்வென அது இருக்க முடியாது.

நம் ஜமா எப்பவோ கலைந்துவிட்டது. அவரவர் எங்கெங்கேயோ. 'பீஷ்மனை' அபூர்வமாகச் சந்திக்கிறேன். ஆனால், தருமபுத்ரனின் சத்யரதம்போல், பூமியில் பாதம் பாவாத அந்தப் பரவச நாட்களின் அடையாளமாக நீங்கள் எனக்குத் திகழ்கிறீர்கள்.

மாஸூ , நினைவிருக்கிறதா?- இந்த அடியெடுப்பு என் சமுத்ரம் தாண்டலுக்கு எனக்கு ஹனுமத் பலம்; என் ககனத்துக்கு என் இறக்கை விரிப்பு, மாஸூ-லா.ச.ராமாமிருதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/6&oldid=1143366" இலிருந்து மீள்விக்கப்பட்டது