பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

உடல் நலத்தையே உலகில் உள்ள ஒவ்வொருவரும் விரும்புகின்றார்கள். ஆனால், உடல் நலத்திற்குரிய செயல்களை செய்திடாது, சிந்தை செல்லும் வழியிலே வாழ்கின்றனர்.

நலம் பாதிக்கப்படும் பொழுது நலிகின்றனர். உடலால் மெலிகின்றனர். துன்பப்பட்டுப் புலம்புகின்றனர்.

வந்த நோய் விடை பெற்றுப் போகும் பொழுது மகிழ்கின்றனர். மீண்டும் அதே பழைய வாழ்க்கை முறை. நோய்க்கு ஆளாகும் நெறி மாறிய நிலை. ஏன் இப்படி?

மனிதர்கள் தங்கள் உடலைப் பற்றி அதிகம் சிந்திக்காமல், அதனால் விளையும் இன்பங்களை மட்டுமே சந்திப்பதால்தான். காசுக்கு வாங்கிய சிறு பொருளாக இருந்தாலும், அதிலே கண்ணுங் கருத்துமாக இருக்கின்றனர். கவனிக்கின்றனர், காக்கின்றனர். அளிக்கின்றனர், காசுக்கு வாங்கியதால் வந்த அக்கறை அது.

வரம் பெற்று வந்த மனிதத் தேகமோ, தானே வளர்ந்து, தானே மலர்ந்து, தானே திடம் நிறைந்து, நோய் தடுத்து வாழும் சக்தி படைத்திருப்பதால், மனிதர்கள் அதனை மதிக்காமல் விட்டு விடுகின்றனர். காசில்லாத இன்பந்தானே இது! இல்லாத பொழுதுதான் ஒரு பொருளை மதிக்கத் தெரிகிற பண்புதான் மனிதப்பண்பு. அதனால்தான் பல சமயங்களில் வம்பாக முடிகிறது.