பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எல்லா மாந்தர்களின் நன்மைக்காகவே பாடல்களைப் படைக்கிறோம் என்பதே உண்மைப் பாவலர்களின் ஒட்டு மொத்தக்குரல். ‘பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா’ என்றான் பாரதி. அதனால்தான் ‘பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலித்திட வேண்டும்’ என்று வாழ்வியல் மெய்ம்மைக் கோட்பாடாய்க் கொண்டு வாழ்ந்தான். மாந்த வாழ்வூடே அன்பின் வெற்றியை இலக்கிய வாயிலாகத் தருவதே பாவலரின் மேன்மையான உயர்வான பணியாகும். அதுவே எதையும் முழுமையாக நோக்கவல்லது. சுருக்கமாகச் சொன்னால் பாட்டிலக்கியம் அன்பின் பரிசளிப்பாகும். எந் நாட்டிலும் எல்லா மக்களிடத்தும் எக்காலத்தில் வரலாற்றில் கொடுமுடியாக விளங்குவது பாட்டிலக்கியமாகும்.

“பாட்டிலக்கியம் மாந்தனின் உள்ளுயிரை ஒளிவிடச் செய்யும் ஒரு பிழம்பாகும். அது எரிந்து ஒளியூட்டுகிறது. ஓர் உண்மையான பாவலன், தவிர்க்க இயலாதவண்ணம் எரிக்கும் வலியினால், தன்னையும் மற்றவர்களையும் உணர்ச்சியற்றுப் போகச் செய்கிறான். விழிப்புணர்வையும் ஊட்டுகிறான் என்பதுதான் இன்றியமையாத முழுமையான செய்தியாகும்.” என்பார் இலியோ தோல்சுதாய். இவ் வகையில் தோன்றிய பாடல்களே உமர்கயாம் பாடல்கள். மேலை நாடுகளிலும் கீழைநாடுகளிலும் எழுத்து வடிவம் பெற்ற மொழிகள் பலவும் உமர்கயாமை உள்ளுவந்து ஏற்றன.

தென்மொழிகளில் கள்ளையும் காதற் தீயையும் சேர்ந்த தீர்சுவைப் பாடல்கள் எட்வர்டு பிட்சொரால்டின் மொழியாக்கம் தழுவி 101 பாடல்கள் வெளிப்பட்டன. பிற மொழிகளில் அதன் மொழியாக்கும் எப்படியோ அறியேன்.