பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மண்ணினோடு சுழலும் விண்ணைப் படைத்தோன் யாவன் ஆயினும்
மண்டும் மாந்தர் நெஞ்சையெல்லாம் துயரில் இட்டு வைத்துளான்;
எண்ணிலாச் செவ் இதழ்கலுடன் இன்மணத்தேன் கூந்தலும்
மண்ணகத்தின் புழுதியூடு மட்க வைத்து மகிழ்கிறான்.


இறைவன் கையில் இருக்கும் விண் என் கையகத்தில் இருந்திடில்
பொடிப்பொடியாய் நொறுக்கி அதைப் பூண்டோடழித் தோட்டுவேன்
தடைகள் அற்ற என்றன் காதல் வேட்கை தழுவும் வகையிலும்
படைத்தளிப்பேன் நானும் மற்றோர் இனிய புதிய விண்ணகம்.

25


வகுத்தவன் தன் வரைபடத்தில் வகுத்து விட்டான் யாவுமே
மிகுத்த நன்மை தீமை எழுதி எழுது கோலும் மெலிந்ததது
தொகுத்த நமது துயரம் துன்பம் யாவும் தோல்வி கண்டன
வகைப்படுத்தப் பட்டுவிட்ட யாவும் காலம் தொடங்குமுன்.


வாணாள் ஒன்றைக் கூட்டவோ நாம் குறைக்கவோ ஓர்வழியில்லை
வாணாள் ஒன்று கூடின் குறையின் வருந்தி நிற்றல் ஏனடா?
வீணாய் இங்கே நீயும் நானும் விரும்பும் வண்ணம் இல்லையே.
கானாய் நமது கைகளால் கனிவதில்லை வாழ்க்கையே.