பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

"நான்கு காலங்கள் அல்ல; நான்கு பஞ்சாங்கங்கள்! சுல்தான் மாலிக்ஷா இவனைக் கொண்டு வரச் சொல்லி இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறாறே!”

“மாலிக்ஷா இவனைக் கொண்டுவா என்கிறார். இவன் காலத்தை அளக்கப் புதிய கருவியைக் கொண்டு வா என்கிறான். இந்தக் கருவியை வைத்துக் கொண்டு என்னதான் செய்வதோ தெரியவில்லை. விழித்தெழுந்ததிலிருந்து தூக்கம் வரும்வரை ஒவ்வொரு வினாடியையும் அளந்து கொண்டிருப்பான் போலிருக்கிறது” என்று டுன்டுஷ் சலித்துக் கொண்டான்.

“இல்லையில்லை இளவேனிற் காலத்திலும் முன்பனிக் காலத்திலும் இரவும் பகலும் சரி சமமாக இருக்கும் ஒரு நாளை அவன் கண்டுபிடிக்க முடியும். இந்தப் பெருந்துணின் துணையால் கதிரவனின் நிழல் மிக மிக நீண்டு விழும். குளிர் காலத்தின் ஒரு நாளில் நிழல் மிக மிகக் குறுகி விழும். கோடைகாலத்தின் ஒரு நாளையும் அவன் முடிவு செய்ய முடியும்.

இந்த ஆராய்ச்சிகளையும், விண்மீன்களின் இயக்கத்தைப் பற்றி அவன் செய்திருக்கும் ஆராய்ச்சிகளையும் பயன்படுத்தி அவன் புதுமையான ஒரு காலக் கணித முறையை ஏற்படுத்த முடியும். அவன் என்ன செய்வானென்பது எனக்குப் புரிகிறது” என்று நிசாம் ஓர் ஆராய்ச்சியே நடத்தினார்.

“அல்லல்லா! ஆண்டவன் அருள் பாலிப்பானாக!” என்றான் டுன்டுஷ்.

“ஆண்டவன் அருள் பாலித்தால், மாலிக் ஷா அவர்களின் ஆட்சியில் நாம் ஒரு புதிய பஞ்சாங்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.”

இது ஓர் அருமையான ஏற்பாடாக நிசாம் அவர்களின் மூளையில் தோன்றியது. மாலிக் ஷாவின் ஆட்சியில் அவருக்கே சொந்தமான ஒரு பஞ்சாங்க முறை அமுலுக்கு வந்தால், அவருக்குப் பெருமையாக இருக்கும். பெருமையின் பூரிப்பால் அவர் முதன் முதலாக அரசாங்க வானநூல் கலைஞராக அமர்த்திக் கொள்வார். இது சரியான ஏற்பாடு என்று தோன்றியது.