பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

123

கொடுப்பார். ஆனால் அவர் ஒருவரிடம் வைத்திருக்கும் நம்பிக்கை குறையுமானால், கொல்லும் கத்தி முனையைக் காட்டிலும் கொடுரமாக மாறிவிடுவார். அரசர்களின் போக்கே இதுதான். அன்பிருந்தால் ஒரேயடியாகத் தூக்கி வைத்துக் கொள்ளுவார்கள். வெறுப்பிருந்தால் உயிருக்கு உலை வைக்கும் ஆயுதமாக அவர்களே மாறிவிடுவார்கள். அவருடைய கருணை உன்மீது என்றும் இருக்குமென்றே எண்ணுகிறேன். அப்படியே அல்லா அருள் புரிவாராக! ஆயினும் அவருடைய அரண்மனை முழுவதும் அவருடைய உளவாளிகள் தேனடையை மொய்க்கும் தேனீக்களைப் போல - எங்கும் சுற்றிக் கொண்டே யிருப்பார்கள். அவர்களுடைய கண்களுக்கு எந்த விஷயமும் தப்பாது, உன்மீது வெறுப்பூட்டுவதற்குப் பலர் முயல்வார்கள். அவருடைய ஆதரவு இருக்கும் வரை உன் வாழ்வு இன்ப வாழ்வுதான். அது நீங்கியதோ, உன்னுடைய வாழ்வு பெருமை, செல்வம், உயிர் எல்லாம் அழிந்து போக வேண்டியதுதாம். என்னுடைய ஆதரவு உனக்கு எப்போதும் உண்டு. ஆண்டவன் அருளால் என்னை நேரடியாக எதிர்ப்பவர்கள் யாருமே இப்போது இல்லை. மேலும் என்னுடைய அரசியல் செல்வாக்கிற்குக் காரணம் என்னுடைய பெரும் உழைப்புத்தான். இந்த சாம்ராஜ்யத்தை அமைப்பதில் நான் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறேன்.”

இவ்வாறு பலவிதமான உபதேசங்களைச் செய்து வந்த நிசாம், தமக்கு அந்த சாம்ராஜ்யத்தை படைப்பதில் நெடுநாளாக இருந்து வந்த பெரும் பங்கையும், தன் உழைப்பையும், அரசுக்கும் தனக்கும் உள்ள தொடர்பையும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அவருடைய விளக்கத்திலே மூன்று தலைமுறைகள் சரித்திரமே அடங்கி யிருந்தது. பழைய சுல்தான் ஆல்ப் அர்சலான் புயல் போலப் புகுந்து பல நாடுகளை வென்று பாக்தாதிலே வெற்றிக்கொடி நாட்டியதையும், அலெப்போ நகரையும் மெக்காவையும், மெதினாவையும் கைப்பற்றியதையும் சாமர்கண்டிலிருந்து, கான்ஸ்டாண்டி நோபில் வரை பரந்து கிடக்கும் அந்தப் பெரிய சாம்ராஜ்யத்தையும் அதன் ஏகபோகச் சக்ரவர்த்தியாக இப்போது விளங்கும் இளஞ் சிங்கம் சுல்தான் மாலிக்ஷாவின் நிலைமையையும் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தினான். உமார், இப்படிப்பட்ட ஓர் அரசனுக்குச் சேவை செய்வதில் பெருமை இருப்பதாகக் கருதினான்.