பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மாலிக்ஷா, அந்தத் தாளை எடுத்து வரும்படி தன்னுடைய செயலாளரைப் பணித்தார்.

அவர் கொண்டு வந்து கொடுத்ததும், பிரித்துப் படித்தார். அவருடைய கண்கள் வியப்பால் விரிந்தன. எழுதியிருந்ததை இரைந்து படித்தார்.

“ஐந்தாவது கதவு வழியாக!”

“யா அல்லா தேவதைகளின் பேராசானே! உண்மையில் நீ ஒருவனின் எண்ணங்களைத் தெரிந்து கொள்கிறாய்!” என்று பாராட்டினார்.

உமார் ஒன்றும் சோதிடக் கணக்குப் பார்க்கவில்லை. அந்தப் பயலின் சூழ்ச்சியைப் பற்றிச் சிறிது யோசித்துப் பார்த்தான். நான்கு திசைக் கதவுகளில் ஏதாவது ஒன்றின் வழியாக அவன் போவதாக இருந்து, தானும் ஒரு திசையைக் குறிப்பிட்டால், தன் அதிர்ஷ்டவசமாகத் தான் குறிப்பிடும் திசையும் அவன் வெளியேறும் திசையும் ஒன்றாகவே இருந்து விடவும் கூடும். ஆனால், தன்னை நிச்சயமாக மோசம் செய்ய நினைத்த அந்தப் பயல், அதிர்ஷ்டம் விளையாடுவதற்குரிய வாய்ப்பைக் கூட தனக்குக் கொடுக்க மாட்டான். உமார் நிச்சயமாகத் தோல்வியடைவதையே விரும்புவான்.

ஆகவே, உமார் நான்கில் எதையாவது சொல்லுவதை எதிர்பார்த்து, இங்குள்ள யாருக்கும் தெரியாத வேறொரு தனிக் கதவு ஒன்றின் வழியாக, அவன் போவதற்குத் திட்டமிட்டிருக்க வேண்டும் என்று சூழ்ச்சியின் போக்கையாராய்ந்து முடிவு செய்தானே தவிர வேறில்லை.

மாலிக்ஷா அவனருகில் நெருங்கி வந்து உட்கார்ந்து கொண்டு அவன் தோளிலே தட்டிக் கொடுத்தார். ‘நீ தான் இரண்டாவது அறிஞர் அலி சென்னா’ என்று மனமாரப் பாராட்டினார். தன் செயலாளரைக் கூப்பிட்டு, “உமாரின் வாய் நிறையத் தங்க நாணயங்களை அள்ளிக் கொட்டு. இந்தப் பொன்னான வாயை பொன்னாலேயே நிரப்பு” என்றார் உட்னே அந்தச் செயலாளன், சுல்தான் அருகில் இருந்த பெட்டியைத் திறந்து, உமாரின் வாயிலே பொன் நாணயங்களைத் திணிக்கத் தொடங்கிவிட்டான்.