பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

எல்லாவிதமான வரைவுப் படங்களும் கூடிய இதுபோன்றப் புத்தகம், இந்த நிஜாப்பூர்ப் புத்தக நிலையத்தில் கூட, இல்லையே என்று பேரம் பேசத் தொடங்கினார் யாஸ்மியின் தந்தை.

ரஹீம், குறுக்கிட்டு, “இந்தப் புத்தகத்தை, நானே விலைகொடுத்து வாங்குகிறேன். இப்ராஹீம் மகனான இந்த என் நண்பன் உமாருக்கு இதை நான் என் அன்புப் பரிசாகக் கொடுக்கப் போகிறேன்” என்றான்.

இப்ராஹீம் மகன் ஆவலுடன் அந்தச் சிவப்புப் புத்தகத்தைத் தன் வலிவான கரங்களால் எடுத்துக் கொண்டான்.

எடுத்துக்கொண்டே “பழைய புத்தகம்தானே கிழவரே, இதுதான் சுல்தான் முகமது தனது தங்கச் சிங்காதனத்தில் வைத்திருந்த புத்தகம் என்று கதையளக்கத் தொடங்கி விடாதீர். நெடுநாட்களுக்கு முன் இறந்து போன நம் மத விரோதியான ஒரு கிரேக்கன் எழுதியது இந்த நூல் என்பதும் பதினான்கு தீனார்கள்(பொன்கள்) தான் பெறும் என்பதும் எங்களுக்குத் தெரியும்” என்றான்.

“வரைவுப்படம் இல்லாமல் வெறும் எழுத்துடன் கூடிய புத்தகமே நீர் சொல்லும் விலையைப் போல் இரண்டு மடங்கு இருக்கும். இதில் நிறைய விளக்கப்படங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் தையலும் கட்டடமும்..” என்று இழுத்தார் யாஸ்மியின் தந்தை.

சுமார் ஒரு மணிநேரம் பேரம் நடந்தது. உமாருக்கு அதை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென்ற ஆவல் இருந்தது. கடைசியில் தன் நண்பன் உமாருக்காக பத்தொன்பது பொன்களும் சில்லறையும் கொடுத்து ரஹீம் அந்தப் புத்தகத்தை வாங்கினான். கிழிந்தது பற்றிய பேச்சுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.

கடையை விட்டு வெளியே சென்றவுடன் தன்னுடைய பையில் இருந்த பேனா வைக்கும் அழகான பெட்டியை எடுத்து ரஹீமின் கையில் திணித்து விட்டு உமார் ஓடுவதைக் கவனித்தாள் யாஸ்மி.

நண்பன் எவ்வளவு கூவியழைத்தும் உமார் நிற்கவில்லை!