பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

153

தீர்க்கதரிசி என்று சொல்லப்படும் மாதியைப் பின்பற்றுவோர் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் அந்தக் கூட்டத்தார் மக்களிடையே மறைமுகமாகப் பிரச்சாரம் செய்து வருவதையும், அவர்கள் பிரார்த்தனை நடத்தும்போதும், பொய்யான விஷயங்களைப் பற்றிப் போதிக்கும்போதும், வெள்ளை அங்கி அணிந்திருப்பார்களென்றும், அல்லா இவர்களை மீளாத நரகத்தில் ஆழ்த்த வேண்டுமென்றும் குறிப்பிட்டு நிசாம் அந்தக் கடிதத்தை எழுதி, உமாருக்கு எச்சரிக்கை செய்திருந்தார்.

இதைப் படித்து முடித்த உமார் தன் எதிரில் இருந்த வெண்பட்டு முட்டையை பார்த்தான். சிரிப்பு வந்தது. நிசாம் மட்டும் இதைக் கண்டால், இது யாரிடமிருந்து கிடைத்ததென்று தெரிந்தால், வருகிற கோபத்தில் அப்படியே எரிகிற நெருப்பில் போட்டுக் கொளுத்திச் சாம்பலாக்கியிருப்பார். ஆனால், அந்த வெண்பட்டிலே ஓர் அழகான மேலங்கி தைத்துக் கொள்ள வேண்டுமென்று உமார் நினைத்துக் கொண்டான்.


22. அனாதைகளின் கூட்டத்தில் ஆருயிரின் மாதரசி

அலெப்பா நகரில் உள்ள ஜம்மீ மசூதியின் அருகே இருந்தக் குளத்தின் அருகிலே, மாலைத் தொழுகை நேரத்திலே, ஆறு பிச்சைக்காரச் சாமியார்களும் ஒரு கூனனும் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் பழைய போர்வைகளைக் கொண்டு தங்கள் உடலைச் சுற்றியிருந்தார்கள். பிச்சைக்காரர்களுக்கே உரிய கந்தைத் துணிகளை உடுத்தியிருந்தார்கள்.

அந்தக் கூணன், ஒரு கைத்தடியின்மேல் சாய்ந்து கொண்டு, தன்னுடைய வளைந்த கைகளை நீட்டி, வழியில் வருவோர் போவோரிடமெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அந்த வழியாகப் பலப்பல விதமான மனிதர்கள் சென்று கொண்டிருந்தார்கள். படோடோபமான உடையணிந்தவர்களும், முக்காடிட்ட முகங்களுடன் அருகே நெருங்கி ஒருவரோடொருவர் பேசிக்கொண்டும், தாங்கள் வாங்கியுள்ள சாமான்களைப் பற்றியும், துணிமணிகளைப் பற்றியும் விவரித்துக் கொண்டு செல்லும் பெண்களும், தங்கள் தம்பிமார்களை முதுகிலும் இடுப்பிலும் தூக்கிக்கொண்டு கிடுகிடுவென்று ஓடும்