பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

181

உச்சியிலே வான்முகட்டிலே ஈட்டி பிடித்த குதிரைக்காரர்கள் பாய்ந்து சென்று கொண்டிருப்பதை அவர்கள் கண்டார்கள். குதிரைக்கால்கள் சிதறி எறிந்த சிறுசிறு கற்கள் உருண்டு விழும் ஓசையையும் கேட்டார்கள்.

“இந்தக் குன்றுகளின் வயிற்றிலிருந்து திடீரென்று மனிதர்கள் பிறந்துவிட்டார்கள்! வேடிக்கைதான்” என்று ஜபாரக் மெல்லிய குரலிலே தன் விகடத்திறமையைக் காட்டினான்.

அந்தக் குதிரைகளிலே வந்த கூர்டியர்கள் வளைந்து வளைந்து விரைந்து வந்ததைப் பார்த்தால், ஒளிந்திருக்கும் இவர்களைச் சுற்றி வளைத்துக்கொள்ள வருவதுபோலிருந்தது. அக்ரோனோசின் தோள்கள் பயத்தால் ஆடின. மூச்சைப் பிடித்துக்கொண்டு இருந்தான். கடைசியாக அமைதி நிலவியது. நெடுநேரத்திற்குப் பின்னர் ஜபாரக்தான் முதன் முதலில் பேசத் தொடங்கினான்.

“அவர்கள் நம்மைக் கவனிக்கவில்லை” என்று அவன் கூவினான். அவன் கூவி ஒரு மணிநேரம் சென்ற பிறகு, தொடர்ந்து அமைதி நிலவியதை மனமாற அறிந்த பிறகுதான் மது வியாபாரி, மறைந்திருந்த இடத்திலிருந்து வெளியில் வந்தான்.

மீண்டும் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். சிறிது தூரம் சென்றவுடனேயே அவர்கள் ஆச்சரியத்தால் ஸ்தம்பித்து தங்கள் மிருகங்களை நிறுத்தினார்கள். அவர்களின் எதிரில், சமதளமான ஓரிடத்திலே, தங்களுக்கு முன் போன வியாபாரிகள் கூட்டத்தின் தேவையற்ற பொருள்கள் பல சிதறிக்கிடந்தன. கயிறுகளும், சாக்குகளும், உடைந்த பெட்டிகளும் அங்கங்கே சிதறிக் கிடந்தன. ஒரு நொண்டிக் கழுதையும் சில நாய்களும் தவிர வேறு மிருகங்களோ, பொருள்களோ, அவற்றுடன் வந்த வியாபாரிகளோ யாரும் தட்டுப்படவில்லை. சிதறிக் கிடந்த அந்தப் பொருள்களுடன் நாலைந்து ஒட்டகக்காரர்கள் வாடிய முகத்துடன் குந்திக்கொண்டிருந்தார்கள். அவ்வளவுதான்.

எந்த விதமான ஆயுதமும் காணப்படவில்லை. ஆயுதந்தாங்கிய காவல் வீரர்கள் காற்றோடு காற்றாக மறைந்துவிட்டார்கள். பலப்பல வழிப்பறிக் கொள்ளைகளைப் பார்த்து