பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

293


அடிமைகளின் காலடி ஓசை பலத்தது, அவர்கள் அவனைத் தூக்கிக்கொண்டு இருண்ட நடைபாதை வழியாகச் சென்றார்கள். தாங்க முடியாத சோர்வு உமாரைத் தழுவிக்கொண்டு வந்தது.

சந்தடிகள் எல்லாம் நின்ற பிறகு, ஏதோ கனமான புகைநாற்றம் ஏற்பட்டது. உமார் மிகுந்த முயற்சியுடன் தன் கண்களைத் திறந்தான்.

தன் தலையைத் திருப்பிப் பார்த்த போது, கணப்பிலே சிவந்த கரித்தணல் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டான். அந்தக் கணப்பிலிருந்து எழுந்த புகை தன் முதத்திலே வந்து படுவதையும் அறிந்தான். அந்தப் புகையிலே நல்ல வாசம் கலந்திருந்தது. அவனுடைய நெற்றியின் குறுக்காக ஒரு கை வந்து தன்னைத் தொடுவதைக் கண்டு திரும்பிய உமார், ஹாஸான் தன்னைக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான். ஹாஸனுடைய வாய் “சொர்க்கத்திற்கு, சொர்க்கத்திற்கு” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தன!


35. சொர்க்கத்திலே ஒரு சுந்தரி

தூரத்திலே நட்சத்திரங்கள் ஒரே கூட்டமாக இருந்தன. அவற்றிற்கிடையிலே ஒளி மயமான இரட்டைத் தலைகள் தோன்றின. முதலில் ஒரு நண்டு தன் கால்களை விரிப்பது போலிருந்த அந்த இரட்டை ஒளிக்கோடுகள் பிறகு நிலவாக உருவெடுத்தன. உமார் தன்னுடைய தலையைத் திருப்பிப் பார்த்தான். வானிலே அவையவையிருக்க வேண்டிய இடத்திலே இருந்தன.

ஆனால், அடிவானத்தின் மேலே தங்க மயமாகத் தோன்றிய அந்த நிலவு மட்டும் இங்கே இருக்க வேண்டாததாகத் தோன்றியது. மேலும் தன் கையை நீட்டினால் எட்டிப் பிடித்து விடக்கூடிய அவ்வளவு அருகிலேயே அந்த நிலவு ஒளிவீசிக் கொண்டிருந்தது. இது நம்ப முடியாததாக இருந்தது.

படுத்திருந்த அவன் எழுந்து உட்கார்ந்தபொழுது, தன் உடல் சிறிது கூடக் கனமில்லாமல் நினைத்த போது முயற்சியில்லாமலே அசைவது போலத் தெரிந்தது. எழுந்து நின்றான்.